முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா திருத்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு  முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு நடுவே நடைபெற்றது. 

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு  முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு நடுவே நடைபெற்றது.  மலைக்கோயில் நான்கு கிரிவீதியை சுற்றி வந்த தேரை இலட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

பழனி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் பங்குனி உத்திரம் முக்கியமானதாகும். பங்குனி உத்திரத் திருவிழா பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த மார்ச்.28ம்தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விழா நாட்களில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தந்த சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, தங்கமயில் உள்ளிட்ட பலவாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருளினார். கடந்த வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.  முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்ட வடம்பிடித்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு பழனி சண்முகநதியில் தீர்த்தவாரி உற்சவமும், தீர்த்தம் வழங்குதலும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி தேரில் ஏற்றம் செய்யப்பட்டார். மாலை 4.30 மணியளவில் திருத்தேரில் தம்பதி சமேதர் சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடத்தப்பட்டது.

பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு கிரிவீதிகளில் ஆடி அசைந்து உலா வந்தது. தேரை திருக்கோயில் யானை கஸ்தூரி பின்னேயிருந்து தள்ளியது. தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் கைதட்டி அகோரகா என கரகோஷம் எழுப்பினர். இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நடைபெற்றது. மலைக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பால், இளநீர், கரும்பு காவடி எடுத்தும், கொடுமுடி தீர்த்தம் தரித்தும், அலகு குத்தியும் வந்திருந்தனர்.  சேவல்களும் நேர்ச்சை செலுத்தப்பட்டது. 

பக்தர்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மலைக்கோயில் படிவழிப்பாதை, வின்ச், ரோப்கார் போன்ற பகுதிகளிலும், மலைக்கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பழனி அடிவாரம் திருஆவின்குடி கோயிலில் பழனி புஷ்பகைங்கர்ய சபா சார்பில் சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  இன்று (சனிக்கிழமை) வையாபுரி கண்மாயில் வானவேடிக்கை, தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது.  வரும் திங்கள்கிழமை திருஆவினன்குடியில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், திண்டுக்கல் சரக டிஐஜி., அறிவுச்செல்வம், எஸ்பி., சரவணன், கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் முருகன்,  பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லச்சாமி,  நகர்மன்ற துணைத்தலைவர் முருகானந்தம், இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், வேல்ஸ் கோர்ட் பாஸ்கரன், ஹோட்டல் கண்பத் ஹரிஹரமுத்து, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், முருகனடிமை பாலசுப்ரமணியம்,  வ.உ.சி. பள்ளி தாளாளர் முத்து, பொன்னு எலக்ட்ரிக்கல்ஸ் பொன்னுச்சாமி, விஸ்வநாதன், கே.ஜி., மருத்துவமனை மருத்துவர் ராமசாமி, காண்ட்ராக்டர் நேரு, சுகந்தவிலாஸ் மகேஷ், சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சுப்பிரமணி, தாளாளர் ஜெயலட்சுமி சுப்பிரமணி, ஆந்திராவங்கி மேலாளர் மாரிமுத்து, புஷ்ப கைங்கர்ய சபா செயலர் மருதசாமி, அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.