நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்: சிதம்பரம் நகருக்கு வருகை தந்த சப்த நதிகளின் புனிதநீர்
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்களால் சப்த நதிகளில் இருந்து புனித நீர் (சப்தநதி தீர்த்தம்) ஞாயிற்றுக்கிழமை
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்களால் சப்த நதிகளில் இருந்து புனித நீர் (சப்தநதி தீர்த்தம்) ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.. பின்னர் புனிதநீரை மேள, தாளத்துடன் ஊர்வலமாக நான்குவீதிகள் வலம் வந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு வருகிற ஏப்.22-ம் தேதி முதல் 12 கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெறுகிறது. கும்மாபிஷேகத்திற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி (திரிவேணி சங்கமம் அலகாபாத்), சிந்து (காஷ்மீர்), கோதாவரி (ஆந்திரா), தலைகாவிரி (கர்நாடகா), நர்மதா (ஓங்காரிஸ்வரா) ஆகிய சப்த நதிகளில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டு வர பல்வேறு பிரிவுகளாக பொதுதீட்சிதர்கள் சென்றனர். இவர்கள் அனைவரும் சென்னையில் ஒருங்கிணைந்து சப்த நதிகளின் புனிதநீருடன் ரயில் மூலம் சிதம்பரம் நகருக்கு திங்கள்கிழமை வருகை தந்தனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த புனிதநீரை எடுத்து வந்த பொதுதீட்சிதர்களுக்கு இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் மற்றும் திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு புனித நீர் குடங்கள் தங்க மஞ்சத்தில் வைத்து வேணுகோபால்பிள்ளைத்தெரு, கமலீஸ்வரன்கோயில் தெரு மற்றும் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று புனிதநீரை வரவேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களிள் கமிட்டி செயலாளர் ஜ,சர்வேஸ்வரதீட்சிதர், கும்பாபிஷேக கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.