முகப்பு
தற்போதைய செய்திகள்

செய்யாறு அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து: பி.ஆர்.ஓ., செய்தியாளர்கள் உள்பட 5 பேர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஜீப் கவிழ்ந்த விபத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தியாளர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஜீப் கவிழ்ந்த விபத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தியாளர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் சொந்த ஊரான முக்கூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி வழிகிறது.

உடையும் தருவாயில் உள்ள இந்த ஏரியை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், செய்யாறு கோட்டாட்சியர் பிரபு சங்கர், வட்டாட்சியர் ரெஜினா பேகம் உள்ளிட்டோர் இன்று மாலை 4.30 மணிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஏரி உடையாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

நிவாரணம் வழங்க புறப்பட்டனர்:

இதையடுத்து, செய்யாறு அடுத்த புலியறம்பாக்கம் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.

செய்தியாளர்கள் பயணம்:

அமைச்சரின் ஆய்வு நடவடிக்கைகள் குறித்த செய்தி சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் செய்யாறு பகுதி தினமணி நிருபர் சாலமன் (52), தினகரன் நிருபர் நடராஜன் (40), பாலிமர் டிவி நிருபர் வேணு வெங்கடேசன் (35) ஆகியோர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.

ஜீப் விபத்துக்குள்ளானது:

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறைக்குச் சொந்தமான இந்த ஜீப்பை, ஓட்டுநர் மணி (32) ஓட்டிச் சென்றார். மாலை சுமார் 5.30 மணிக்கு செய்யாறு-ஆரணி சாலையில் உள்ள வெள்ளை கூட்ரோடு அருகே உள்ள வளைவில் ஜீப் திரும்ப முயன்றது.

அப்போது, எதிர்பாராதவிதமாக செய்தியாளர்கள் சென்ற ஜீப் 3 சாலையில் தலை குப்புற கவிழ்ந்து, 3 முறை உருண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஜீப்பில் சென்ற 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதை கவனித்த பின்னால் வந்து கொண்டிருந்த செய்யாறு காவல் ஆய்வாளர் செந்தில், 5 பேரையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர், ஆட்சியர் ஆறுதல்:

முன்னாள் சென்றுகொண்டிருந்த அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனே திரும்பி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

5 பேருக்கும் தரமான சிகிச்சையை துரிதமாக வழங்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, 5 பேருக்கும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, செய்யாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.