துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேணடும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சக்திவேல் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் கௌரவத்தலைவர் ஜி.இஸ்ரவேல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில ஆலோசகர் எல்.டி.சகாயம், மனித உரிமைக் களம் அமைப்பாளர் ம.பரதன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினர்.
இதில், ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். பணியில் இருந்து விடுபடும் போது ரு.5 லட்சம் அளிக்க வேண்டும். கையால் மலம் அள்ளுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் மற்றும் பாதாளச்சாக்கடை மற்றும் மலக்குழிக்குள் இறந்த துப்புரவு பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ரூ.10 லட்சம் நஷ்ட ஈட்டுத் தொகை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், மாவட்ட தலைவர் பரமசிவம், சமூக ஆர்வலர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நிறைவாக மாவட்ட செயலாளர் குருசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.