விருதுநகர் அருகே பெண் கொலை வழக்கு தொடர்பாக சரியான முறையில் விசாரணை மேற்கொ்ள்ளாமல் போலீஸார்களிடையே குளறுபடியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(28). இவர் பிளக்ஸ் போர்டு, சுவரொட்டிகள் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கோமதி(25). பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு கோமதியை ரெங்கராஜ் கொலை செய்து சாக்கு பையில் வைத்திருப்பதாக, பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த வீட்டுக்கு சென்ற போலீஸார் சாக்குப் பையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றினர். மனைவியின் நடத்தை சரியில்லாததால் கொலை செய்து சாக்கு பையில் கட்டி வைத்ததாக ரெங்கராஜ் வாக்குமூலம் அளித்ததால் போலீஸார் கைது செய்தனர்.
அப்போது பஜார் காவல் நிலைய ஆய்வாளராக(கூடுதல் பொறுப்பு) இருந்த பாண்டியன் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேணுகோபால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தவில்லையாம். இதைத் தொடர்ந்து ராஜபாளையத்திலிருந்து இருந்து மாறுதலாகி பஜார் காவல் நிலைய ஆய்வாளராக ராமநாராயணன் பொறுப்பேற்றார். கோமதி கொலை வழக்கு தொடர்பாக ரெங்கராஜ் குடியிருப்பு அருகே உள்ளவர்களிடம் விசாரித்தார். அதில், கோமதி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிற்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கல்லில் உறவினர் வீட்டில் தொடர்பு கொண்டதில் உயிரோடு அங்கிருப்பது தெரியவந்தது.
சாக்குப்பையில் சடலமாக இருந்த பெண் குறித்து விசாரித்தனர். இம்மாவட்டத்தில் காணமல் போனவர்கள் பற்றி ஆய்வு செய்ததில் பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் மனைவி செல்வி(42) ஜன-28ம் தேதி காணமல் போயிருந்தது தெரியவந்தது. அதை கொலை செய்யப்பட்ட பெண் சடலத்திலிருந்து இருந்து கைப்பற்றப்பட்ட உடைகள், தோடுகள் ஆகியவைகளை வைத்து அப்பெண்ணின் மகள்களிடம் காட்டியதில் தனது தாய்க்குறியது என உறுதி செய்தனர்.ரெங்கராஜை போலீஸார் திரும்ப போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், எனக்கும் செல்விக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று பழைய பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு உல்லாசமாக இருக்க அழைத்து சென்றேன். கூடுதலாக பணம் கேட்டு தகராறு செய்ததால் கொலை செய்ததாக வாக்கு மூலமும் அளித்தார்.
எனவே பெண் கொலை வழக்கு தொடர்பாக முறையாக விசாரணை செய்யாத காவல் ஆய்வாளர் வேணுகோபால் மீது துறைரீதியாக நடவடிக்கை மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனந்தகுமார் சோமானி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.