போலீஸார் சுட்டதில் ரெளடி சாவு: நெல்லை, சுத்தமல்லியில் நீதிபதி விசாரணை
திருநெல்வேலி அருகே போலீஸார் சுட்டத்தில் இளைஞர் கிட்டப்பா இறந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை நீதிபதி மாயகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
திருநெல்வேலி அருகே போலீஸார் சுட்டத்தில் இளைஞர் கிட்டப்பா இறந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை நீதிபதி மாயகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
மேலச்செவல் அருகே கான்சாபுரத்தை சேர்ந்த முத்துக்குட்டி மகன் கிட்டு என்ற கிட்டப்பா (39). இவர் கடந்த 2003 இல் பத்தமடை கரிசூழ்ந்தமங்கலத்தில் இரட்டைக் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்பட 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த கிட்டப்பாவை மாநகரப் பகுதியில் ஈடுபட்ட பல்வேறு வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் கிட்டப்பாவை போலீஸார் தேடி வந்தனர்.
சுத்தமல்லி அருகே கே.எம்.ஏ. நகரில் பதுங்கியிருந்த கிட்டப்பாவை பிடிக்க மாநகர தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் பிடிக்க சென்றனர். அப்போது போலீஸாரை கிட்டப்பா தாக்கியதை அடுத்து, போலீஸார் சுட்டத்தில் இறந்தார்.
இந்த சம்பவத்தில் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கூட்டாளி தப்பி ஓட்டம்: சுத்தமல்லி அருகே கே.எம்.ஏ. நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டில் பதுங்கியிருந்த கிட்டப்பா, போலீஸார் சுட்டதில் இறந்தார். அப்போது கிட்டப்பாவுடன் இருந்த அவனது கூட்டாளி நரசிங்கநல்லூரை சேர்ந்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கிட்டப்பாவுடன் சேர்ந்து பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய தப்பி ஓடிய முருகனை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
நீதிபதி விசாரணை: போலீஸார் சுட்டதில் கிட்டப்பா இறந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சேரன்மகாதேவி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மாயகிருஷ்ணன், ஞாயிற்றுக்கிழமை காலை சம்பவம் நடைபெற்ற கே.எம்.ஏ. நகருக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது டி.எஸ்.பி. ராஜேந்திரன் (சேரன்மகாதேவி), ராஜாராம் (தாழையூத்து), சுத்தமல்லி காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.
பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த நீதிபதி மாயகிருஷ்ணன், கிட்டப்பாவின் உடலை பார்வையிட்டார். கிட்டப்பாவின் உறவினர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.