செம்மர கட்டை கடத்தல் வழக்கு : டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமின் மனு தள்ளுபடி
செம்மர கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமின் மனு ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
செம்மர கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமின் மனு ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் மாதனூர் பாலூரை சேர்ந்த சின்னபையன் (40) செம்மர கட்டை கடத்தல் தகராறில் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு சம்பந்தமாக 4 பேரை ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். செம்மர கட்டை கடத்தல் வழக்கில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு, வேலூர் அலமேலுரங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதி, காஞ்சிபுரத்தை சேர்ந்த மூவர் உள்பட இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதி ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து வேலூர் கலால் டிஎஸ்பியை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜூன் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி ஆனந்தராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அவரை கொண்டு சென்றனர்.
ஜாமின் மனு விசாரணை - மனு தள்ளுபடி :
டிஎஸ்பி தங்கவேலுவை ஜாமினில் எடுக்க அவரது வழக்குரைஞர் ஆம்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கலால் டிஎஸ்பிக்காக வழக்குரைஞர் ஆர். ஆனந்த் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் சந்தியா ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்தராஜ் உத்தரவிட்டார்.
டிஎஸ்பி வழக்கை விசாரிக்க ஆம்பூர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - வழக்குரைஞர் தகதவல் :
வழக்கு குறித்து டிஎஸ்பி தங்கவேலுவின் வழக்குரைஞர் ஆர். ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882-ன் சில சட்டப்பிரிவின் கீழ் டிஎஸ்பி தங்கவேலு கைது செய்யப்பட்டுள்ளார். வனத்துறை சட்டத்தில் சந்தனமரம், செம்மர கட்டை ஆகியவை சம்பந்தமான வழக்கு விசாரணைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்துறை சட்டப் பிரிவின் கீழ் தங்கவேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் இந்த வழக்கை விசாரிக்க ஆம்பூர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. டிஎஸ்பி தங்கவேலு கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூட இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்திற்கு தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறி எங்களுடைய வாதத்தை முன் வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.