என்மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு இதுவரை ஆதாரத்தை அரசால் திரட்ட முடியவில்லை: ஆ.ராசா
பழனியில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பழனியில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கருப்புச்சாமி, சௌந்திரபாண்டி, பழனி நகராட்சி நகர்மன்ற தலைவர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தமிழ்மணி வரவேற்புரை வழங்கினார். கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ., வேணுகோபாலு உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ராசா பேசுகையில்,
அதிமுக தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு தினமும் இருபது லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை வழங்கவில்லை. மாறாக குடிநீர் பாட்டிலை அரசே விலைக்கு விற்கிறது. தினமும் மின்சார தட்டுப்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது. என் மீதான ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டுக்கு இதுவரை வாய்தா வாங்காமல் சென்று வருகிறேன். என்மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு இதுவரை ஆதாரத்தை அரசால் திரட்ட முடியவில்லை. நான் பதவியேற்ற பின் கோடிக்கணக்கான மக்கள் செல்போன் வாங்கும் வகையில் அதற்கான கட்டணத்தை குறைக்க வழிவகை செய்தேன். இதுகுற்றமா?. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும். ஆயிரக்கணக்கில் கடன் இருந்த நிலையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி தற்போது இலட்சக்கணக்கில் கடனை வைத்துள்ளது. மத்தியிலும் பாஜக அரசு பெரும்பான்மை இருக்கும் நிலையில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றையும் நினைத்ததை செய்ய முற்படுகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ]
விரைவில் மக்கள் சக்தி பாஜகவுக்கு எதிராக திரும்பும். கலைஞருக்கு அடுத்த படியாக ஸ்டாலின் சிறப்பான செயல்பாட்டில் உள்ளார். ஒவ்வொரு முறையும் தீயசக்திகளால் தாக்கப்படும் போது அதை வெளிப்படுத்தாத தன்மை பயத்துக்காக அல்ல. தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே. 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கப்படும் என்று தெரிவித்த ஆளும்கட்சி பலரது பென்ஷனையும் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது என பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ.,க்கள் பூவேந்தன், அன்பழகன், துணைச் செயலாளர் சக்திவேல், திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.