முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த அழகு.திருநாவுக்கரசு உடலுக்கு வியாழக்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த அழகு.திருநாவுக்கரசு உடலுக்கு வியாழக்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சரும் திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில செயலருமான அழகு.திருநாவுக்கரசு(68) உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை சென்னையில் காலமானார்.இதனை அடுத்து அவரது உடல் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழகு.திருநாவுக்கரசின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அடுத்துள்ள எடமேலையூருக்கு கொண்டு வரப்பட்டு மேலதெருவில் உள்ள அவரது இல்லதில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த அழகு.திருநாவுக்கரசின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வியாழக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பின்னர் காரில் எடமேலையூருக்கு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,அழகு.திருநாவுக்கரசு உடலுக்கு மாலை அணிவித்து அவரது மனைவி,மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது: அனைத்து கட்சியினரும் மதிக்கும் வகையிலான செயல்பாடு கொண்டவர் அழகு.திருநாவுக்கரசு.சொந்த ஊர்காரர்களுக்கு மட்டும் அல்லது அனைவருக்கும் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.தனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களையும்,உணர்வுகளையும் அழுத்தம்,திருத்தமாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்.கட்சி நலனுக்கான ஆக்கபூர்வமான கருத்துகளை மிக நுட்பக கூறக்கூடியவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி நம்பமுடியாததாக உள்ளது.அவர் விட்டு சென்ற பணியை தொடர்வதே உண்மையான அஞ்சலியாகும்,கட்சி தலைவர் கருணாநிதியின் கருத்தின் படி நேரில் அஞ்சலி செலுத்த வந்தேன் என்றார்.
Advertisement
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு,முன்னாள் மாநில அமைச்சர்கள் கோ.சி.மணி,எ.வ.வேலு.கே.என்.நேரு,உ.மதிவாணன்,மாவட்டச் செயலர் பூண்டி.கே.கலைவாணன் உள்பட ஏராளமான திமுகவினர்,அனைத்துகட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அழகு.திருநாவுக்கரசின் உடல் அடக்கும் இன்று வெள்ளிக்கிழமை மதியம் எடமேலையூரில் நடைபெறவுள்ளது.