தற்போதைய செய்திகள்

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்  ஓ.பன்னீர் செல்வம் 

DIN

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டது. மறைந்த ஜெயலலிதா தலைமையில் இடம்பெற்றிருந்த அதே 31 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கூட்டாக பொறுப்பேற்றனர். இதற்கான நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். அவை முன்னவர் மதுசூதனன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர். பதவியேற்பு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசின் பொதுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே செய்திருந்தனர்.

மௌன அஞ்சலி: பதவியேற்பு நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌனம் கடைபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பதவியேற்பு

நிகழ்வு நடந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன் என ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைத்து அமைச்சர்கள் கூட்டாக மொத்தமாக பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்து வைத்தார்.

மூன்றாவது முறையாக முதல்வர்: அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்ட இரண்டு தருணங்களில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், அந்த நெருக்கடிகள் தீர்ந்த பிறகு முதல்வர் பொறுப்பை மீண்டும் ஜெயலலிதாவிடமே
ஒப்படைத்து இருக்கிறார்.

2001-இல் டான்சி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. அப்போது, முதல் முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஓ.பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டில் பெங்களூர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. அப்போது, இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இப்போது, முதல்வர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பை மூன்றாவது முறையாக ஓ.பி.எஸ். ஏற்றுள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பல முக்கிய துறைகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சராகப் பணியாற்றியவர். பொதுப்பணித் துறை, நிதித் துறை ஆகிய பொறுப்புகளுடன் சட்டப் பேரவை பொறுப்பான அவை முன்னவர் பொறுப்பையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா தொடர் மருத்துவ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது துறையின் பொறுப்புகள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதியில் இருந்து ஜெயலலிதா வகித்த பொறுப்புகளை அவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT