அம்பையில் மரம் முறிந்து விழுந்ததில் ஆற்றில் குளித்த பெண்கள் இருவர் சாவு
அம்பாசமுத்திரத்தில் சனிக்கிழமை மாலை மருத மரம் முறிந்து விழுந்ததில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த பெண் உள்பட இருவர் இறந்தனர்.
திருநெல்வேலி,
அம்பாசமுத்திரத்தில் சனிக்கிழமை மாலை மருத மரம் முறிந்து விழுந்ததில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த பெண் உள்பட இருவர் இறந்தனர்.
அம்பாசமுத்திரத்தில் தாமிரவருணி ஆற்றில் ரயில்வே பாலத்திற்கு மேற்கு பகுதியில் சனிக்கிழமை மாலை ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் கரையோரமாக நின்ற பழமையான மருத மரம் திடீரென முறிந்து படித்துறையில் விழுந்தது. இதில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த சென்னை குருநாத் நகர் பகுதியை சேர்ந்த அப்துல்மஜித் மனைவி சபுராள்பீவி (50),
அம்பாசமுத்திரம் சங்கரன்கோவில் சாலையை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி லட்சுமி (45) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சபுராள்பீவி சம்பவ இடத்திலே இறந்தார்.
கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த சபுராள்பீவி, தனது உறவினர்களுடன் காரில் அம்பாசமுத்திரத்தில் தாமிரவருணி ஆற்றில் குளிக்க வந்தாராம். அப்போது மரம் விழுந்ததில் அவர் இறந்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி இரவில் அங்கு இறந்தார். இந்த சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் ஆற்றங்கரையில் நின்றிருந்த மரங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. மரத்தின் உட்புறத்தில் எரிந்து கொண்டிருந்த தீயில் பலமிழந்த மரம் கருகி முறிந்து விழுந்து விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.