முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 ஆண்டுகளுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 ஆண்டுகளுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. 

குமரி கடலில் உருவான ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் 3 தினங்கள் கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்த பலத்த மழையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதான அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. 

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 137.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3136.27 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1609 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இவ்விரு அணைகளும் மூடப்பட்டன. 

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை, 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி, 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை, 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை ஆகிய 4 அணைகளும் ஒரே நாளில் (நவ. 29 இல்) நிரம்பின. 

இதையடுத்து சேர்வலாறு அணையில் இருந்து 1659 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 366 கனஅடி, ராமநதி அணையிலிருந்து 158.46 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 150 கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.13 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 83.60 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 83.00 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.21 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 43.00 அடி, அடவிநயினார் அணையின்  நீர்மட்டம் 112.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.00 அடியாகவும் உள்ளது.

கல்லிடைக்குறிச்சி அருகே 28.70 அடி கொள்ளளவு கொண்ட வண்டல்ஓடை அணையும் நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து உபரிநீர் 30 கனஅடி திறக்கப் பட்டுள்ளது. பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 21, பாபநாசம் கீழ் அணை 33, சேர்வலாறு அணை 4, மணிமுத்தாறு அணை 6, கடனாநதி அணை 20, ராமநதி அணை 25, குண்டாறு அணை 4, நம்பியாறு அணை 12, கொடுமுடியாறு அணை 10, கன்னடியன் அணைக்கட்டு 5, அம்பாசமுத்திரம்10, சேரன்மகாதேவி 1.2, பாளையங்கோட்டை 3, திருநெல்வேலி 1, நான்குனேரி 10, ராதாபுரம் 22, தென்காசி 1.4, சங்கரன்கோவில் 2. நீடிக்கும் தடை: மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர், பாதுகாப்பு வளையம், கம்பிகள் ஆகியன அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அருவியில் 33 ஆவது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.

சேர்வலாறு அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவிகளில் ஒரு சேர வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஞாயிற்றுக்கிழமை 4 ஆவது நாளாக அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீடிப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாபநாசம் சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →