முகப்பு
தற்போதைய செய்திகள்

காதல் திருமணத் தகராறில் இளம்பெண் கொலை நெல்லையில் கணவன்-மனைவிக்கு தூக்குதண்டனை

காதல் திருமணத் தகராறில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவன் மனைவிக்கு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:43 AM
பகிர்:

திருநெல்வேலி:  காதல் திருமணத் தகராறில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவன் மனைவிக்கு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. 

பெண்ணின் கணவருக்கு அரசு ரூ. 8.25 லட்சம் இழப்பீடு, அவரது குழந்தைக்கு 21 வயது வரை மாதம் ரூ. 11,600 ம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு கல்பனா (30) என்ற மகளும் விஸ்வநாதன் (25) என்ற மகனும் உள்ளனர். விஸ்வநாதன் ரயில்வே கேட் கீப்பராக பணி செய்து வந்தார். கல்பனாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் சற்குணம் (32), வேன் ஓட்டுநர். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் துரைதீபக் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

விஸ்வநாதன், தச்சநல்லூர் மங்களாக்குடியிருப்பை சேர்ந்த கிராம உதவியாளர் சங்கரநாராயணன் (52) என்பவரின் மகள் காவேரி (24) யை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இதில் ஆத்திரமடைந்த காவேரியின் தந்தை, சங்கரநாராயணன் 13.5.2016 அன்று இளங்கோநகரிலுள்ள கல்பனா வீட்டுக்கு வந்தாராம். அவரிடம் விஸ்வநாதனை
கேட்டு தகராறு செய்தாராம். அப்போது அரிவாளால் கல்பனாவை சங்கரநாராயணன் வெட்டி விட்டு தப்பி விட்டார்.

ஒன்றரை வயது துரைதீபக்கை மடியில் வைத்திருந்த கல்பனா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 6 பிரிவுகளில் கிராம உதவியாளர் சங்கரநாராயணன், அவரது மனைவி செல்லம்மாள் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை மாநகர காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்தார்.

இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட 2 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் 17 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 22 ஆவணச் சான்றுகளும், அரிவாள் உள்ளிட்ட 7 ஆணவப் பொருட்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 17.8.2016 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ. அப்துல்காதர் கணவன் மனைவி ஆகியோர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என திங்கள்கிழமை தெரிவித்தார். அதன்படி, செவ்வாய்க்கிழமை மதியம் நீதிபதி தீர்ப்பளித்தார். காதல் தகராறில் தொடர்பில்லாத கல்பனாவை, ஒன்றரை வயதுள்ள குழந்தையின் முன்னிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற கொலை வழக்குகளில் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற 7 வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில்  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கல்பனாவை சாதிய சொல்லி திட்டியும், கூட்டு சதி செய்தும் கொலை செய்த குற்றவாளியான சங்கரநாராயணன், உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோருக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கல்பனாவின் கணவர் சற்குணத்துக்கு ரூ. 8.25 லட்சம் இழப்பீடும், அவரது குழந்தை துரைதீபக் என்பவருக்கு சம்பவம் நிகழ்ந்த நாளில் இருந்து 21 வயது வரை மாதந்தோறும் ரூ. 11,600 ம் உதவித் தொகையும் அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ராஜபிரபாகரன் ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →