வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை அணையின் நீராதாரங்களை வலுப்படுத்த வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
வெள்ளக்கோவிலில் இருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவிலுள்ள உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை அணை உள்ளது. கொள்ளளவு 2,683 லட்சம் கன அடி. 1979 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையிலிருந்து அடுத்த ஆண்டு முதன்முதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 37 வருடங்களாகத் திறக்கப்படவில்லை. அணைக்கு நீர்வரத்து இல்லாததே இதற்குக் காரணமாகும். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் நேரடியாகவும், பல்லடம், காங்கயம் பகுதியிலிருந்து இவ்வாய்க்கால் கசிவு நீர் மூலமாகவும் நீர்வரத்து இருந்தது.
ஆனால் அங்கிருந்து தொடர்ந்து நீர் கிடைக்காததால், அணை வறண்டே கிடக்கிறது. இதனை நம்பியிருக்கும் நாகமநாயக்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, புதுப்பை ஊராட்சிகள் மற்றும் வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர், விவசாயப் பயன்பாட்டுக்குப் போதுமான தண்ணீரின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றிலிருந்து இந்த அணைக்குத் தண்ணீர் கொண்டு வரும் ரூ.255 கோடி மதிப்பிலான வெள்ளநீர் இணைப்புக் கால்வாய்த் திட்டம் தமிழக அரசின் வரைவு நிலையில் உள்ளது. இதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.
பரம்பிக்குளம் - ஆழியாறு ஆயக்கட்டிலிருந்து நீக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்குப் பதிலாக, இந்த அணையின் பாசனப் பரப்பினை அதில் சேர்க்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
வட்டமலைக்கரை அணை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், 10 பொது நல அமைப்புகள், கட்சி சார்பின்றி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
கனடா வாழ் இந்தியர் லோகநாதன், அணை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் க.பழனிசாமி, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவர் ஆர்.ராஜ்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.