புதுவையில் 106.8 டிகிரி வெப்பம்: பொதுமக்கள் கடும் அவதி
புதுச்சேரியில் திங்கள்கிழமை 106.8 டிகிரி வெப்பம் வீசியதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் திங்கள்கிழமை 106.8 டிகிரி வெப்பம் வீசியதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி கத்தரி வெயில் தொடங்கியது. 'கத்திரி' எனப்படும் அக்னி வெயில் துவங்கியதும், வெயிலின் தாக்கம் தாங்கமுடியாத அளவிற்கு இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவ நிலை மாற்றங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே, கோடை காலங்களில் வெயில் சர்வ சாதாரணமாக 1௦௦ டிகிரியை தாண்டி வீசுகிறது.
இடையில் ஒரு நாள் மட்டுமே பலத்த காற்றுடன் மழை பெய்தது. துவக்கத்தில் 100 டிகிரி என்ற அளவிலேயே இருந்த நிலை மாறி திங்கள்கிழமை 106.8 டிகிரி என்ற அளவில் கடும் வெப்பம் நிலவியது.
கடும் வெப்பம் காரணமாக கடற்கரை சாலை, முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இரவு நேரங்களில் புழுக்கம் தாங்க முடியாத அளவில் உள்ளது. இதனால், மாலை நேரங்களில் கடற்கரை மற்றும் பாரதி பூங்கா பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குடும்பத்துடன் கூடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மே மாதம் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை குறித்த விவரம்:
ஆண்டு தேதி டிகிரி
2007 15 107.42
2008 19 105.44
2009 16 105.26
2010 28 106.34
2011 08 105.80
2012 18 109.40
2013 25 108.32
2014 24 104.72
2015 26 104.72
2016 27 105.08.