தற்போதைய செய்திகள்

அனைத்து விதிமீறல் கட்டடங்களையும் இடிக்க வேண்டும்: ராமதாஸ்

DIN

அனைத்து விதிமீறல் கட்டடங்களையும் இடித்துவிட்டு, மீண்டும் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட தீயை 10 மணி நேரத்துக்கு மேலாகியும் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தத் தீ விபத்தால் அந்தத் துணிக்கடையைச் சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கட்டடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு மற்ற மாடிகளுக்கும் பரவியது. தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.

ஆனால், ஒருபுறம் மேம்பாலம், மறுபுறம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து விதிகளை மீறி கட்டடங்களை கட்டியதால்தான் விபத்துகளும், சேதங்களும் தடுக்க முடியாதவையாகிவிட்டன.

சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 ஆயிரம் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று 2006 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்வோர் இக்கட்டடங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மாறாக, அவற்றை இடித்துவிட்டு, விதிகளுக்குட்பட்டு மீண்டும் கட்டுவதுதான் சரியானதாக இருக்கும்.

எனவே, துணிக்கடை தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, சென்னையில் உள்ள அனைத்து விதிமீறல் கட்டடங்களையும் இடித்துவிட்டு, மீண்டும் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT