தமிழகத்தை ஆள்வது முதல்வரா? இல்லை ஆளுநரா?: ராமதாஸ் பரபரப்பு கேள்வி
ல்வி நிலையங்களில் மதவாதிகளை புகுத்தி தமிழ்நாட்டை காவி மயமாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதகா குற்றம்சாட்டிய ராமதாஸ்
சென்னை: கல்வி நிலையங்களில் மதவாதிகளை புகுத்தி தமிழ்நாட்டை காவி மயமாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதகா குற்றம்சாட்டிய ராமதாஸ் தமிழகத்தை ஆள்வது முதல்வரா? இல்லை ஆளுநராரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது பதவியை ரத்து செய்யக்கோரியும் பாமக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், மத்திய அரசால் தமிழ் நாட்டுக்கு தொடர்ந்து பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. இப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும். இது ஒரு அடையாளப் போராட்டம் தான். அடுத்தக்கட்டமாக மாணவர்களை திரட்டி ஆளுநர் மாளிகை நோக்கி செல்வோம். அப்போது துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
Advertisement
இப்போது தமிழ்நாட்டை ஆள்வது முதல்வரா? இல்லை ஆளுநரா? பல விஷயங்களில் ஆளுநர்தான் முடிவு எடுக்கிறார். இந்த நேரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா? அவர் இருந்தபோது பல துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்தார்.
ஆனால், யாராவது வேந்தரான ஆளுநரை சந்தித்து நன்றி கூட சொன்னது உண்டா? இப்போது அப்பட்டமான தவறுகள் நடக்கின்றன. மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது. பல்வேறு வகைகளில் ஹிந்தியை திணித்துப் பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை. இப்போது கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து அதன் மூலம் ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கப் பார்க்கிறார்கள்.
திட்டமிட்டு தில்லியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் மற்றும் சுனில் பாலிவால் ஆகியோரை செயலாளர்களாக கேட்டுப் பெற்று இந்த மூவர் கூட்டணி தலைமையில்தான் அனைத்து சதி வேலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. துணைவேந்தரை நியமித்தது தங்களுக்கு தெரியாது என்று தமிழக அரசு சொல்கிறது.
அப்படியானால் இந்த மூவர் கூட்டணியை உடைக்கலாமே. அதற்கான அதிகாரம் தமிழக அரசிடம் இருக்கிறது. ஊழலும் நிர்வாக சீர்கேடுகளும், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. தமிழன் என்று சொல்லாதே, தலைகுனிந்து நில்லாதே என்ற நிலையில்தான் இன்று தமிழர்கள் உள்ளனர்.
ஊழலை விட மோசம் மதவெறி. இப்போது கல்வி நிலையங்களில் மதவாதிகளை புகுத்தி தமிழ்நாட்டை காவி மயமாக்கும் முயற்சி நடக்கிறது. இதை முறியடிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.