மும்பை: கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் நிகழ்ந்த தீவிபத்துக்கு பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என விசாரணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மும்பையில் லோயர் பரேல் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் 'டிரேட் ஹவுஸ்' என்ற வணிக வளாகக் கட்டடத்தின் மேல்தளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு குஷ்பு பன்சாலி என்பவர் தனது பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த 'அபோவ் ஒன்' என்ற உணவு விடுதியில் கொண்டாடினார். நள்ளிரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்தநாள் கொண்டாடிய குஷ்பு பன்சாலியும், 10 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குஷ்பு பன்சாலியின் நண்பர்கள் ஆவர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விடுதியின் உரிமையாளர்களின் உறவினர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட சிலரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் நிகழ்ந்த தீவிபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மாநகர ஆணையரிடம் வழங்கப்பட்ட அறிக்கையில், தீவிபத்து பாதுகாப்பு விதிகள் எதையும் விடுதி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கமலா மில்ஸ் கட்டடத்தில் இயங்கி வந்த இரு கேளிக்கை விடுதிகளிலும் வாடிக்கையாளர்கள் புகைபிடிப்பதற்காக ஹூக்கா எனப்படும் குழாய் போன்ற அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் கரி மற்றும் புகையிலை உட்பொருட்கள் தீ எளிதில் பரவ காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்து நிகழ்ந்த உடன் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிப்பதிலும் இரு விடுதி நிர்வாகங்களும் ஆர்வம் காட்டவில்லை என விசாரணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.