தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு அமல்: வீட்டுக் காவலில் முன்னாள் முதல்வர்கள் 

DIN


ஸ்ரீநகர்: பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை இரவு அறிவுறுத்தியது.

 அதற்கு முன், ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஏற்கெனவே, அந்த மாநிலத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டதால் பல்வேறு யூகங்கள் எழுந்தன.

 குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்ய இருப்பதாக அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்தன. இதனால், மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஜம்மு-காஷ்மீரில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது. அதைத் தொடர்ந்து, "ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்து அளிக்கும் 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டமில்லை' என்று மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சனிக்கிழமை உறுதியளித்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தில்லியில் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இக்கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தலைமைச் செயலகம், காவல்துறை தலைமையகம், விமான நிலையம், பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 ஸ்ரீநகருக்குள் செல்லும் முக்கிய சாலைகள், நகரில் இருந்து வெளியே செல்லும் முக்கியச் சாலைகள் ஆகியவற்றில் பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை அமைத்து, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் விடுதியில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறுஉத்தரவு வரும் வரை திரும்பி வர வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீநகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்துப் போராடுவதென்று அந்த மாநில அரசியல் கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், "பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு (144 தடை உத்தரவு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜம்முவில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செல்லிடப்பேசி இணையதள சேவை நிறுத்தப்பட்டு விட்டது. காவல் துறை அதிகாரிகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் லடாக்கில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT