தற்போதைய செய்திகள்

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்

DIN


கர்நாடக முதல்வராக எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் இன்று அமைச்சர்களாக 17 பேர் பதவியேற்க உள்ளனர். 

கர்நாடகத்தில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத -காங்கிரஸ் கூட்டணி அரசு ஜூலை 23-இல் கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவரான எடியூரப்பா  முதல்வராக ஜூலை 26-இல் பதவியேற்றார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் ஜூலை 29-இல் நடைபெற்ற தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.   அவரைத் தவிர, அமைச்சராக யாரும் பதவியேற்காததால்,  வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணியை எடியூரப்பா மட்டும் தன்னந்தனியாகக் கவனித்து வந்தார். 

கடந்த 25 நாள்களாக தனியாக அமைச்சரவையை நடத்தி வந்த எடியூரப்பாவை காங்கிரஸ்,  மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதைத் தொடர்ந்து,  அமைச்சரவையை அமைக்க எடியூரப்பா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தார். கடந்த ஆக. 16-இல் புது தில்லி சென்றிருந்த எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அமைச்சரவை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று திரும்பினார். 

இதைத் தொடர்ந்து,  பெங்களூரில் உள்ள  ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பதவியேற்கின்றனர்.

அமைச்சர்களாக பதவியேற்கும் 17 பேர் யார்?
பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக், ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு, மாதுசாமி, சசிகலா ஜோலே, ராஜூ கவுடா, பசவராஜ் பொம்மை, சுரேஷ்குமார், நேரு ஓலேகர், சோமண்ணா, கோவிந்த் கார்ஜோள், டாக்டர் அஸ்வத் நாராயணா, எம்.எல்.சி கோட்டா சீனிவாஸ் பூஜாரி என சில புதிய முகங்களும் சில பிரபலங்களும் உள்ளன. 

மஜத- காங்கிரஸ்  கூட்டணி அரசு கவிழ்வதற்கும், பாஜக அரசு அமைவதற்கும் காரணமாக இருந்த மஜத, காங்கிரஸ் கட்சியைச் 17 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாததால் 17 பேரில் யாருக்கும் அமைச்சராக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களுக்காக அமைச்சரவையில் அதே அளவுக்கு இடங்களை காலியாக வைக்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அமைச்சரவை பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்கினால், அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி சமாதானப்படுத்தவும் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்படி கர்நாடக அமைச்சரவையில் முதல்வர் உள்பட 34 பேர் இடம் பெற முடியும். இப்போது முதல்வர் ஒருவர் மட்டுமே உள்ளார். மீதம் 33 இடங்கள் காலியாக உள்ளன. இன்று 17 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றால், மீதம் 16 இடங்கள் காலியாக இருக்கும்.

அமைச்சர்கள் பதிவியேற்பு விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT