தற்போதைய செய்திகள்

துணை நிலை ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்ப்தான்: புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி 

DIN


காரைக்கால்: துணை நிலை ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப்தான் என நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டதாக புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்தார். 

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவருக்கு ஆறுதல் கூறுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை காரைக்கால் வந்தவர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறியது: 

மக்களவைக்கு இதுவரை நடைபெற்ற 6 கட்டத் தேர்தலில் மதச்சார்பற்றக் கூட்டணி அமோக வெற்றிபெறும். கடந்த முறை பாஜக 272 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 160 இடங்கள் கூட வெற்றி பெற முடியாது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளையெல்லாம் சேர்த்தால்கூட பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பதற்கான சூழல் பிரகாசமாக உள்ளது. 

தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை, மக்கள் நலத் திட்டங்களைக் கூறி ஏன் வாக்கு கேட்கவில்லை. புல்வாமா தாக்குதல், எல்லையில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல் குறித்து மட்டுமே பேசினார். எனவே, திட்டங்களைக் கூறி வாக்குக் கேட்காததே பாஜகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

மதத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தலில் ஆதாயம் தேட முனைந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதை முறியடித்து விட்டார். பாஜகவின் மதம் சார்ந்த பிரசாரம் நாட்டில் எடுபடவில்லை. மதக்கலவரத்தை உருவாக்கி இந்துத்துவா கொள்கையை கொண்டு வரவும், மதவெறியில் ஈடுபடவுமே பாஜக முயன்று வருகிறது.

எனவே, இதுபோன்ற சூழலில் தென்னிந்தியாவில் 135 இடங்களில் 15 இடம் கூட பாஜகவுக்கு கிடைக்காது. மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று கூறியவுடன் அதற்கு கண்டனம் தெரிவிக்காத பிரதமர், ஒரு நாள் கழித்தே எதிர்ப்பு தெரிவிக்கிறார். இக்கருத்தைக் கூறிய பாஜக வேட்பாளரை கட்சியை விட்டு நீக்கம் செய்யாதது ஏன்?

தீவிரவாதம் என்பது ஒரு மதத்துக்குச் சொந்தமானது அல்ல. உலகம் தழுவிய அளவில் தீவிரவாதம் உள்ளது. 

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற பல மதங்களில் தீவிரவாதம் உள்ளது. எனவே, நரேந்திர மோடி ஹிந்து தீவிரவாதம் இல்லை என்பதுபோல கூறுவது அப்பட்டமான பொய். உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

ரவுடிகள் ஒடுக்கப்படுவர்: புதுச்சேரி வில்லியனூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரௌடி, போலீûஸ தாக்கிவிட்டுத் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகள் எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடியது அல்ல. 

துணை நிலை ஆளுநர் என்பவர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று அவர் கூறினார். ஆனால், நீதிமன்றமே அப்பதவி ரப்பர் ஸ்டாம்ப் என்பதை உறுதிப்படுத்திவிட்டது. புதுச்சேரியில் எங்கள் அரசு பொறுப்பேற்றவுடன், புதுச்சேரியில் ரௌடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கினோம். அது தற்போது மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளது. 

ரவுடிகளின் அட்டகாசத்தை இந்த அரசு ஒடுக்கும் என்றார் முதல்வர் வி. நாராயணசாமி. 

பேட்டியின்போது, வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT