தற்போதைய செய்திகள்

கபினியிலிருந்து உபரி நீர்: இன்றிரவு மேட்டூர் வரும்

DIN


கபினியிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் புதன்கிழமை இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும். 

கர்நாடகம் மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளம் மாநிலத்தில் கபினியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 65 அடி உயரம் கொண்ட கபினியின் நீர் மட்டம் 61 அடியாக உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளதாலும் பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும்  அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையிலிந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 32,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

கபினியிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் 182 கிமீ தொலைவு கடந்து மேட்டூர் அணைக்கு வந்து சேர 36 மணிநேரம் ஆகும். புதன்கிழமை பிற்பகலில் ஓஹேனக்கல் வந்து சேரும் கபினியின் உபரிநீர் புதன்கிழமை இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் வரலாற்றில் கடந்த ஜூன் 12 இல் 87-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.73 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்த நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் கடந்த இரண்டு மாதங்களில் அணையின்  நீர் மட்டம் 37.58 அடி சரிந்து புதன்கிழமை காலை அணையின் நீர் மட்டம் 64.15 அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின்நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலையடைந்த நேரத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினிக்கு நீர்வரத்து அதிகரித்து அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 64.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,613 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 27.87 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT