தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 300 நாள்களாக 100 அடிக்குக் குறையவில்லை: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

கு. இராசசேகரன்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 300 நாள்களாக 100 அடிக்கு குறையாமல் இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு  ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28ந்தேதி வரை 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும்.

கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் அணையிலிருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அணை நிரம்பியது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த நீர்பாசன ஆண்டு மேட்டூர் அணை அடுத்தடுத்து நான்கு முறை நிரம்பியது. 

நடப்பு ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த நீர்ப்பாசன ஆண்டு முழுவதும் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 151 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் இன்றுவரை தொடர்ந்து 300வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. கடந்த 2005 2006 ஆம் ஆண்டில் தொடர்ந்து 427 நாள்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. 

கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 300 நாள்கள் 100 அடிக்கு குறையமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க  உள்ளது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில்தான் குறித்த நாளில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12க்கு முன்பாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1902 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.01 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT