தற்போதைய செய்திகள்

கைதிக்கு கரோனா:  கெங்கவல்லி காவல்நிலையம் மூடல்; இன்ஸ்பெக்டர், 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

DIN


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மணல் கடத்தி, கைதானவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் உள்பட 17 காவலர்களுக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கெங்கவல்லி காவல் நிலையமும் மூடப்பட்டது.

கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்த 24 வயதுள்ள ஒருவர் திங்கள்கிழமை காலை நடுவலூர் ஏரியிலிருந்து அனுமதியின்றி மண் எடுத்து விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடுவலூர் கிராம நிர்வாக அலுவலர் கனகம், கெங்கவல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) முருகன் தலைமையில் போலீசார், நடுவலூர் சென்று, திங்கள்கிழமை பிற்பகல் சோதனை செய்ததில், அந்த 24 வயதுள்ள நபரை கையுங்களவுமாகப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரை கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து, விசாரணை செய்து, திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை மதியம் கிடைத்த மருத்துவ அறிக்கையில், மணல் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டவருக்குத் தொற்று உறுதியானது.

இந்த தகவலையடுத்து, தொற்று உள்ளவரை அழைத்துவந்த கெங்கவல்லி காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்பட 17 பேருக்கும் செவ்வாய்க்கிழமை ரத்த, சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு, இன்று புதன்கிழமை தெரியவரும்.

இந்த நிலையில், கைதிக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதால், கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்நிலையம் முழுவதும் கெங்கவல்லி பேரூராட்சி செயல் அலுவலர் அல்போன்ஸ் உத்தரவின்பேரில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் கெங்கவல்லி காவல்நிலையம் மூடப்பட்டது.

தொற்று ஏற்பட்டவரின் சகோதரர், ஒடிசாவில் ரிக் வண்டியில் ஓட்டுநராக பணியாற்றிவிட்டு, கடந்த பத்து நாள்களுக்கு முன்னர், சொந்த ஊரான நடுவலூருக்கு யாருக்கும் தெரியாமல் வந்துள்ளார். அவர் குடும்பத்தினருடனும், கடந்த பத்துநாள்களாக நடுவலூர் முழுவதும் சென்று வந்துள்ளார். அவரிடமிருந்து அவரது சகோதரரும், மணல் கடத்தியவருமானவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நடுவலூர் கிராம மக்கள் மிகுந்த அச்சப்படுகின்றனர்.

நடுவலூரில் மணல் கடத்தியவரின் குடும்பத்தினர் 6 பேர் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தலின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கெங்கவல்லி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேர், சேலம் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT