கூடலூரில் வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்: வனத்துறை பறிமுதல்
தேனி மாவட்டம் கூடலூரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்களை மேகமலை வன உயிரின காப்பாளர் புதன்கிழமை பறிமுதல் செய்தார்.
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்களை மேகமலை வன உயிரின காப்பாளர் புதன்கிழமை பறிமுதல் செய்தார்.
தேனி மாவட்டம் கம்பம் வனத்துறையினர் ரோந்து செல்லும் போது மர அறுவை மில் ஒன்றில் தேக்கு மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுபற்றி மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் சச்சின் போஸ்லேவுக்கு தகவல் தெரிவித்தனர்.
வனக்காப்பாளர் தேக்கு மரங்கள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு மரங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலர் பொறுப்பு அருண்குமார் தேக்கு மரங்களை கைப்பற்றி கம்பம் வனத்துறை அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றார்.
தனியார் நிலத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் தொடர்பாக மரங்கள் வெட்டுவதற்கு உரிய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதா, மரத்தின் உரிமையாளர் மற்றும் அதன் தொடர்புடைய நபர்களிடம் மேகமலை வன உயிரின காப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.