ஆமதாபாத்தில் இரவுநேர பொதுமுடக்கத்தின் நேரம் நீட்டிப்பு: திரையரங்குகள் மூடல்
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத். ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் மார்ச் 17 முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுமுடக்கம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆமதாபாத்தில் மட்டும் இரவுநேர பொதுமுடக்கமானது இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.