இங்கிலாந்து நாட்டில் உடைந்த பூந்தொட்டி ஒன்று ரூ.56 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு தோட்டத்தில் உடைந்த நிலையில் 4 அடி உயரமுள்ள பூந்தொட்டி ஒன்று இருந்துள்ளது. அந்தப் பூந்தொட்டியானது ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற செராமிக் கலைஞரான ஹான்ஸ் கோபர் என்பவரால் உருவாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அப்பூந்தொட்டி ஏலத்துக்கு விடப்பட்டது. துவக்கத்தில், ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பூந்தொட்டியை விலைக்கு வாங்க அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தப் போட்டியினால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து இறுதியாக 66 அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 56 லட்சம்) விற்பனையாகியுள்ளது. மேலும், அந்தப் பூந்தொட்டியானது சேதாரமாகியுள்ளதால் அதனை சீரமைக்க ரூ.9 லட்சம் வரையில் செலவாகும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பூந்தொட்டியின் வரலாறு
தற்போது விற்பனையாகியுள்ள அந்தப் பூந்தொட்டி கடந்த 1964-ம் ஆண்டு அடையாளம் தெரிவிக்கப்படாத பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதால், ஹான்ஸ் கோபர் செய்து கொடுத்துள்ளார். பல ஆண்டுகளாக அந்தப் பெண்ணின் தோட்டத்திலிருந்த அந்தப் பூந்தொட்டியை அவரின் மறைவுக்கு பின்னர் குடும்பத்தினர் பாதுகாத்து வந்துள்ளனர்.
பின்னர், அதன் வரலாற்று சிறப்பை அறிந்த அவர்கள் சிஸ்விக் ஆக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தின் மூலம் தற்போது ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர். மேலும், கோபர் உருவாக்கிய கலைப்பொருள்கள் பெரும்பாலும் 10 முதல் 40 செ.மீ. அளவில் மட்டுமே இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் சுமார் 4 அடி உயரமுள்ள இந்தப் பூந்தொட்டி அவர் உருவாக்கிய சில உயரமான பொருள்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்துடன், அந்தப் பூந்தொட்டிக்கு அடியில் அவரது கையெப்பமும் இடம்பெற்றுள்ளது அதன் மதிப்பை மேலும் கூட்டியுள்ளது.
ஹான்ஸ் கோபர்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் கோபர், 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்திருந்த சமயம் அவரது தாய்நாட்டிலிருந்து தப்பித்து இங்கிலாந்தில் குடியேறினார். செராமிக் கலையில் தேர்ந்தவராக அறியப்பட்ட அவர் கடந்த 1981-ம் ஆண்டு இங்கிலாந்தின் சோமர்செட் நகரத்தில் தனது 61-ம் வயதில் காலமானார்.
இன்றளவும் அவர் உருவாக்கிய பல்வேறு வகையான கலைப்பொருள்கள் உலகெங்கிலுமுள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.