முக்கியச் செய்திகள்

விடுதலைக்காக போராடியவர்கள் என சில குடும்பங்களை மட்டுமே தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவது துரதிருஷ்டமானது!

கார்த்திகா வாசுதேவன்

“சுதந்திரப் போராட்டத்திற்காக தங்களது உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்தவர்களென ஒரு சிலரது குடும்பங்கள் மட்டுமே பெருமையாகத் தூக்கிப் பிடிப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது; இந்திய விடுதலை என்பது இனம், மொழி, கலாச்சாரம், பால் பேதங்கள் இன்றி லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. அதில் இன்னார் மட்டும் தான் சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள் என அவர்களையே காலம் தோறும் பாராட்டிக் கொண்டிருந்து விட்டு பிறரை உதாசீனம் செய்வதும், சந்தர்ப்ப வசமாய் மறந்து விடுவதும் கூடாது.

700 முதல் 800 ஆண்டுகள் வரை ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் விடுதலை வேண்டி பலர் செய்த தியாகத்திற்கான பரிசே இப்போதைய நமது சுதந்திரம். ஆனால் விடுதலைக்கு வித்திட்டவர்கள் என நாம் சில குடும்பங்களையும், சில நிகழ்வுகளையும் மட்டுமே தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறோம்.”

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? நமது பாரதப் பிரதமர் மோடி தான். ஒதிஷா ராஜ் பவனில் , பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தை எதிர்த்து ஒதிஷா வில் 1817 ஆம் நடைபெற்ற பைகா கலகத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 16 குடும்பங்களின் வாரிசுகளைச் சந்தித்து அவர்களைப் பாராட்டி பேசிய நிகழ்வில் அவர் அவ்வாறு தெரிவித்தார். இந்திய சுதந்திரப் போர் என்பது மக்கள் பெருவாரியாக ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் நாட்டு விடுதலைக்காக ஒரே நோக்கில் பாடுபட்ட ஒரு நிகழ்வு அதில் பலர் அதிக கவனம் பெறாமல் புறக்கணிக்கப்படுவது சரியல்ல... இந்தியா போன்ற சுயமரியாதை மிக்க ஒரு நாட்டில் அத்தகைய செயற்கரிய செயல்கள் செய்த அனைவரும், அவர் தம் செயல்களும் நினைவு கூரப்பட்டாக வேண்டும். என்றார் மோடி.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மலைவாழ் மக்களின் பங்கு:

சுதந்திரப் போரில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சார்ந்த மலைவாழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. 100, 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுபட அவர்கள் போராடிய வரலாறு ஈடு இணையற்றது. எனவே அவர்களது அறியப்படாத தியாகங்களை இந்நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் நமது நாட்டின் முக்கியமான 50 இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் இந்திய மலைவாழ் மக்கள் சுதந்திரப் போருக்காக செய்த தியாகங்கள் அத்தனையையும் முடிந்தவரை விர்ச்சுவல் மீடியா வழியாக மக்கள்அனைவரையும் சென்றடையச் செய்யும் வகையில் இந்த அரசு முடிவெடுத்திருக்கிறது.

அந்த மக்கள் இன்றளவும் தங்களது வாழ்வாதாரங்களுக்காக தாங்கள் சார்ந்துள்ள காட்டை மட்டுமே நம்பி இருக்கின்றனர். அவர்களின் தியாக உணர்வுகளை இனிமேலும் புறக்கணிப்பது முறையல்ல. வரலாற்றை நினைவு கூர்வது வாழ்வின் மிக முக்கியமான ஊக்க சக்தி, நமக்குத் தேவையான வாழ்வியல் உதாரணங்களை நாம் வரலாற்றிலிருந்து தான் தேடிக் கண்டடைய வேண்டும். முன்னேற்றத்துக்காக ஏணியில் ஏறிச் செல்லும்போது நாம் வளர்ச்சிக்கான பாதைகளைக் கண்டடைவதில் தான் மிகுந்த தாகத்துடன் ஈடுபட வேண்டுமே தவிர வளர்ச்சியை குன்றச் செய்வதற்கான பாதைகளில் அல்ல. என்று மோடி உரையாற்றினார்.

மேலும் அவர் பேசுகையில்; 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒதிஷாவின் பங்கு அளப்பரியது. இந்த மண்ணின் வீரம் மிகு மைந்தர்கள் பலர் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டனர், நூற்றுக் கணக்கான மக்கள் சிறையிலைடைக்கப் பட்டனர். தங்கள் வாழ்நாள் முழுமையும் இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த மக்களின் வாரிசுகளை இன்று நான் சந்திக்க நேர்ந்ததை மிக மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.

2022 ஆம் ஆண்டில் நாடு தனது 75 வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் போது இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகிகள் அனைவரது கனவுகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறான் நான். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்வோமாக! என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இது தவிர மோடி தனது ட்விட்டர் தளத்தில் இந்திய சுதந்திரத்துக்காக தமது இன்னுயிரை இழந்த, கொடுஞ்சிறையில் தமது முழு வாழ்க்கையையும் அர்பணித்த தியாகிகள் பலரது வாரிசுகளை அறிமுகப்படுத்தி அவர்களது முன்னோர்களின் வரலாற்றுப் பங்களிப்பைப் பற்றியும் விவரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர்களில் ஒருவர் தயானந்த மொஹாபத்ரா, இவர் பைகா கலகத்துக்கு வித்திட்ட ஜயீ ராஜ்குருவின் வாரிசு, பக்‌ஷி பித்யாதர் மொஹாபத்ரா, சுபலஷ்மி மொஹாபத்ரா இருவரும் பைகா புரட்சியை தோற்றுவித்த பக்‌ஷி ஜகபந்துவைப் பின்பற்றியவர்கள். இவர்களைப் போன்ற இன்னும் பல தியாக வாரிசுகளை மோடி தமது ட்விட்டர் தளத்தில் பெருமையுடன் அறிமுகப்படுத்தி உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT