முக்கியச் செய்திகள்

ஃபிடல் காஸ்ட்ரோ, பிரபாகரன் குறித்துக் கருத்துக் கூறி ஈழத்தமிழர்களைக் கொந்தளிக்கச் செய்த பிரபல மனநல மருத்துவர்!

RKV

தமிழகத்தைச் சார்ந்த மனநல மருத்துவரான டாக்டர் ஷாலினி ஓரளவு தொலைக்காட்சி நேயர்களிடையே சற்றுப் பிரபலமானவர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதன் மூலமாகவும், பிரபல வார இதழ்கள் மற்றும் மகளிர் இதழ்களில் மனநலன் சார்ந்த தொடர்கள் எழுதியதின் மூலமும் அவருக்கு அந்த பிரபலத் தன்மை கிட்டியது. அவர் சமீபத்தில் கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர்களைச் சந்தித்துத் திரும்பிய பின் தனது முகநூல் பதிவில் புலித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும், கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்தும் அங்கத்திய மக்கள் தன்னிடம் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைப் பதிவு செய்திருந்தார். கனடாவில் அவர் சந்தித்துப் பேசிய ஒரு சில ஈழத்தமிழ் மக்களது கருத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக வெளிப்பட்டிருந்த அவரது பதிவுகள் இணையத்தில் இருக்கும் ஈழத்தமிழ் உணர்வாளர்களைப் பொங்கி எழச்செய்வதாக இருந்தது. 

ஈழப்போரால் தாள இயலாத வலியும், வேதனையும் அடைந்து சொல்லொணாத் துயருற்ற மக்களை வேதனையுறச் செய்த டாக்டர் ஷாலினியின் பதிவுகளின் சாராம்சம் இது தான்...

‘கியூபா பிரட்சித் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி இந்த உலகம் மிகத் தவறான புரிதலையே கொண்டுள்ளது. அவர் மீதான புரட்சிப் பிம்பம் வலிந்து உருவாக்கப்பட்ட ஒன்று. அவர் அந்தப் பட்டத்துக்கெல்லாம் தகுதியானவர் இல்லை. கியூபா மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று. அங்கிருக்கும் வயது வந்த பெண்களுக்கு வேறு வழியில்லாமல் அவரவர் சொந்தத் தாய்மார்களே மாமா வேலை பார்த்துத் தான் ஜீவித்திருக்க வேண்டும் எனும் அளவுக்கு மிக மிக மோசமான அளவில் சீரழிந்துள்ள நாடு கியூபா. நாட்டில் இத்தனை பிரச்னைகள் இருக்க அதை ஒழித்துக் கட்ட ஒன்றும் செய்யாமல் சும்மா வேடிக்கை பார்த்தவர் தான் இந்த ஃபிடல் காஸ்ட்ரோ. உண்மையில் கியூபா மக்கள், ஃபிடலின் முகம் தொலைக்காட்சித் திரைகளில் ஒளிர்ந்தாலே தூவெனக் காறி உமிழ்வது தான் வழக்கம். ஆனால், இந்த உலகத்தின் முன் அவர் ஒரு புரட்சித் தலைவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். என கியூபாவிலிருந்து வந்த மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஷாலினி தனது பதிவுகளில் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமல்ல, டொராண்டோவில் தான் சந்தித்த ஈழத்தமிழ் மக்களில் சிலர், ‘ராஜிவ் காந்தியால் தான் தாங்கள் தற்போது உயிருடன் இருக்கிறோம் என்று நன்றிப் பெருக்குடன் கூறினார்களாம். அது மட்டுமல்ல பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஈழப்போர் தேவையற்று வெட்டிப் போர் என்றும் அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஷாலினி தனது பதிவுகளில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்ல, ஈழப்போரை முன்னிட்டு தனி ஈழக் கோரிக்கை எழுப்பி, ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் தங்களது இன்னுயிரை நீத்த சிலரைப் பற்றிப் பேசும் போது... தன்னிடத்தில் சில ஈழத்தமிழர்கள், அந்த மரணங்கள் அர்த்தமற்றவை... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எங்களது பிரச்னையின் அசலான தன்மை எப்படித் தெரியும்? தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் விவகாரம் ஒரு தேர்தல் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. எங்களுக்காக ஒரு நிலைப்பாட்டை தமிழ்நாட்டில் இருப்பவர்களால் எப்படி எடுக்க முடியும்?  எங்கள் பிரச்னைகள் நீங்கள் நினைப்பதைப் போல அல்ல, அது முற்றிலும் வேறானது. என்று சிலர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஷாலினி பகிர்ந்திருந்தார். இப்படி ஃபிடல் காஸ்ட்ரோ, வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்டோரைப் பற்றி ஒரு சிலரிடம் மட்டுமே பேசி விட்டு அவர்களது கருத்தை ஒட்டுமொத்த கியூபா மக்களின் கருத்து என்றும் ஈழத்தமிழ் மக்களின் கருத்து இது தான் என்றும் பொதுமைப் படுத்தும் விதமாக ஷாலினி தனது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி இருப்பது உண்மையில் ஈழப்போரின் வலியையும், வேதனையையும் ரத்தமும், சதையும் கொதித்து உருக உருக  அனுபவித்து மீண்டவர்களை ஒன்றுதிரட்டி தங்களது எதிர்ப்புணர்வை முகநூலில் கொந்தளிப்பாக முன்வைக்கச் செய்திருக்கிறது.

தனது பதிவுகளுக்கு இணையத்தில் எழுந்த எதிர்ப்புணர்வைக் கண்டு தற்போது ஷாலினி தனது பதிவில் சிலவற்றை நீக்கியுள்ளதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதையும் விடாது ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் சிலர் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது பதிவில் கடைசியாக ஷாலினி குறிப்பிட்ட விஷயம் தான் பதிவின் ஹைலைட்.

நமது சொந்த பூமியில் கமல் கட்சி தொடங்கி விட்டார், ரஜினியும் தொடங்கவிருக்கிறார்... இனி தான் இங்கே மனநல மருத்துவர்களுக்கான தேவை அதிகமிருக்கப் போகிறது. என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை மக்களைப் பைத்தியமடிக்கத்தான் ரஜினியும், கமலும் கட்சி தொடங்கி இருக்கிறார்கள் எனப் பகடி செய்கிறாரோ?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT