முகப்பு
சிறப்புச் செய்திகள்

தீபாவளிக்கு வாங்குவதை எளிதாக்கும் யூடியூப் சேனல்கள்

தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவதை எளிதாக்குவதில் யூடியூப் சேனல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எந்த கடையில், என்ன பொருள்கள், என்ன விலையில் கிடைக்கின்றன என ஏராளமான கருத்துகள் குவிந்து கிடக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
கோப்புப்படம்
பகிர்:

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. கரோனா அச்சம், பணக் கஷ்டம் என பல்வேறு பிரச்னைகள் மக்களுக்கு இருந்தாலும் தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவது ஒருபக்கம் நடந்து கொண்டுதான் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்கள் தொடங்கி கடைநிலைப் பகுதிகள் வரை தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவதை எளிதாக்குவதில் யூடியூப் சேனல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எந்த கடையில், என்ன பொருள்கள் , என்ன மாடல் துணிகள், என்ன விலையில் கிடைக்கின்றன என்பது தொடர்பாக ஏராளமான யூடியூப் சேனல் கருத்துகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இது வெறுமனே துணிகளுக்கு மட்டுமல்ல சாதாரண ஸ்டிக்கர் பொட்டு தொடங்கி விலை உயர்ந்த தங்க, வைர ஆபரணங்கள் வரை அனைத்துக்கும் கடை விரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 460 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் குறைந்தது 265 மில்லியன் பேர் ஒரு மாதத்தில் யூடியூப்பை பயன்படுத்தவும், பார்வையிடவும் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 40 மில்லியன் பேர் புதிய இணைய பயன்பாட்டாளராகின்றனர். இவர்கள் அனைவரும் இணையத்தைப் பயன்படுத்தும் போது ஒரு முறையாவது யூடியூப்பை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 60 சதவீத புதிய இணைய பயன்பாட்டாளர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் அல்ல.

இந்தியாவில் 1,200 யூடியூப் சேனல்கள் பத்து லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. இவற்றில் 120 சேனல்கள் பெண்களால் நடத்தப்படுகிறது. 94 தமிழ் யூடியூப் சேனல்கள் தலா 10 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஏறாத்தாழ 1250 தமிழ் யூடியூப் சேனல்கள் ஒரு லட்சத்தில் இருந்து 10 லட்சத்துக்கு இடைப்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

பொதுவாக இந்த யூடியூபர்களை பிரபலக் கடைகள் தொடங்கி சிறிய கடைகள் வரை ஊக்கப்படுத்துவதோடு அவற்றை யூடியூப்பில் வெளியிடவும் அனுமதிக்கின்றன. இதன் மூலம் ஏராளமான பார்வையாளர்களுக்கு அந்த கடையில் உள்ள பொருள்களின் தரவுகள் சென்று சேர்கின்றன. அந்த கடை நிர்வாகமே செலவழித்து கடை குறித்து ஒரு விளம்பரத்தை எடுத்தால் கூட இத்தனை பேரை சென்றடையுமா என்பது சந்தேகம் தான்.

இதுபோன்ற வீடியோக்களைப் பதிவிடுவதால் யூடியூபர், பார்வையாளர்கள், வியாபாரிகள் என மூன்று தரப்பும் பயனடைகின்றனர். கரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்திய சுமையில் இருந்து மீளும் பல்வேறு தரப்பட்ட வியாபாரிகளுக்கு இந்த யூடியூபர்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் அவர்களது வியாபாரத்தை அதிகரிக்க உதவினால் மகிழ்ச்சியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.