சகல தோஷங்கள் நீங்கும் சக்கரபாணி கோயில்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?
சகல தோஷ பரிகாரத் தலத்தைப் பற்றி ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் தெரிவித்திருப்பது பற்றி..
செழுமாமணிகள் சேரும் திருக்குடந்தை
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அரன் இல் யாயே...
- குடவாயிற் கீரத்தனார்
என்கிற அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளவாறு சங்க கால சோழரின் செல்வக் கருவூலமாக விளங்கிய திருக்குடந்தை எனப்படும் கும்பகோணம் நகர் என்றும் தன்னகத்தே ஆன்மிக செல்வத்தை உறைவிடமாகக் கொண்ட புண்ணிய திருத்தலமாய் விளங்கி வருகிறது. வரலாற்று தொன்மையும், ஆன்மிக மகத்துவமும் வாய்ந்த கும்பகோணம் எனும் மணியாடுபாலையில் ஒளி குன்றா மாணிக்கமாகப் பிரசித்தி பெற்று விளங்கும் மகாமகத் திருக்கோயில்களில் ஒன்று தான் திருக்குடந்தை அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்.
திருக்கோயில் வரலாறு
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய் ஆமையாகி ஆழ்கடல் துயீன்ற ஆதிதேவ! நின்
நாமதேயம் இன்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்கரபாணி யல்லயே
- திருமழிசை ஆழ்வார்
மகா விஷ்ணுவின் ஆயுதங்களாக இருந்து திருமாலுக்கு பணிபுரிபவர்கள் வைகுண்ட லோகத்தில் இருக்கும் நித்தியசூரிகள் என்ற தேவர்கள். அவர்கள் இறைவனுக்கு அடிமை செய்வதற்கு பல்வேறு நிலைகளில் உருவெடுத்துள்ளனர்.
மகாவிஷ்ணு தரித்துள்ள ஆயுதங்களுள் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய ஐந்தும் மகிமை வாய்ந்தன. அவற்றை ஐம்படைகள் என்று சிறப்பாக அழைப்பது வழக்கம். அவற்றுள் சங்கு பாஞ்சசன்னியம் எனவும் கதாயுதம் கௌமேதகி எனவும் வில் சாரங்கம் எனவும், வாள் நந்தகம் என்றும் பெயர் பெற்றுள்ளன. இவை போலவே சக்கரம் சுதர்சனம் என்ற திருநாமத்தைப் பெற்றுள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுள் உயிர்களைக் காக்கும் பொறுப்பு விஷ்ணுவைச் சார்ந்தது. இத்தொழிலைப் புரியும்போது திருத்த இயலாத தீய சக்திகளை அழிக்க வேண்டிய அவசியத்தால் தீயசக்திகளை ஒடுக்கும் பொருட்டு மகாவிஷ்ணு ஐம்படைகளைத் தரித்துள்ளார்.
திருமாலின் வலக்கரத்தில் காணப்படும் சக்கரத்தில் உறையும் தேவன் சுதர்சனர் எனப்படுகிறார். பஞ்ச ஆயுதங்களில் முதன்மையானவர் ஸ்ரீ சுதர்சனர். சுதர்சனமே திருமால் என்றும் திருமாலே சுதர்சனம் என்றும் சொல்லப்படுவது உண்டு. ஸ்ரீசுதர்சன சக்கரம் திருமாலின் அம்சமாக இருப்பதால் இச்சுதர்சனரை சக்கர ரூப விஷ்ணு எனவும் குறிப்பிடுவர். பஞ்சாயுதங்களுக்கும் அரசனாக விளங்குவதால் அவருக்கு ஹேதிராஜன், சுதர்சன ராஜன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன.
திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான சக்கரத்திற்கு உரிய சுதர்சனர் உக்கிர வடிவினராவார். இவரே சக்கரத்தாழ்வார், சக்கரராஜர், சக்கரபாணி சுவாமி என வழிபடப்படுகிறார். புருஷார்த்தங்கள் நான்கினையும் வழங்கும் வள்ளலாக திகழும் ஸ்ரீசுதர்சனர் முக்கிய மூர்த்தியாக நின்று அருள்பாலிக்கும் இத்திருக்கோயிலே ஸ்ரீசக்கரபாணி சுவாமி திருக்கோயில் என வழங்கப்படுகிறது. இத்தகைய மகா சக்தி வாய்ந்த ஸ்ரீசுதர்சனராகிய சக்கரபாணிக்கு என்று இந்தியத் துணைக்கண்டத்தில் அமையப்பெற்றிருக்கும் ஒரே தனித்திருக்கோயில் இதுவாகும்.
தல சிறப்பு
இத்திருக்கோயில் காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கிற பெருமாள் அறுகோண எந்திரத்தின் மீது சக்கர வடிவமான தாமரைப்பூவில் காட்சி தருகிறார். எட்டு திருக்கைகளுடனும், எட்டு திருக்கைகளில் எட்டு விதமான ஆயுதங்களுடனும், மூன்று கண்களுடனும், சக்கரராஜா காட்சியளிக்கும் பேரழகு உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதமாகும்.
புராணங்களில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமி திருக்கோயில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் முடிவில் உள்ள சுலோகத்தை கவனித்தால் கும்பகோணம் நகரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சாரங்கபாணியின் பெயர் சார்ங்க தன்வா - சார்ங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்தியவர் என்றும், ஸ்ரீசக்கரபாணியின் பெயர் ரதாங்கபாணி - தேரின் உறுப்பான சக்கரத்தை அதாவது சக்ராயுதத்தை கையில் ஏந்தியவர் என்றும் இருப்பதைக் காணலாம்.
ஜலந்தராசுரன் என்னும் அசுரனை அழிக்கும் பொருட்டு ஸ்ரீ சார்ங்கபாணி தமது சக்கராயுதத்தினை அனுப்பினார். அச்சமயத்தில் பிரம்மதேவர் ஒரு யாகத்தை செய்து கும்பகோணம் காவிரி நதியின் சக்கரப்படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில் அவப்ருத ஸ்நானம் செய்து எழுந்திருக்கையில் ஸ்ரீ விஷ்ணுவால் அனுப்பி வைக்கப் பெற்ற ஸ்ரீ சுதர்சன சக்கரமானது பாதாள உலகத்தில் ஜலந்தராசுரனை அழித்துவிட்டு காவிரியின் நடுவில் பூமியைப் பிளந்து கொண்டு வெளிக் கிளம்பி பிரம்மனின் திருக்கரத்தில் வந்தமர்ந்தது. இதனால் பெருமகிழ்ச்சியடைந்த பிரம்மதேவனும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தில் காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்தார். காவிரியின் தென்கரையில் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சுதர்சன சக்கரம் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்க சூரியன் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தின் ஒளியைக் கண்டு, தன்னை விடவும் ஒன்று பிரகாசிக்கக் கூடாது எனக் கர்வம் கொண்டு தன்னொளியைக் கூட்ட ஸ்ரீ சுதர்சன சக்கரம் கோடி சூரிய பிரகாசத்துடன் பேரொளி விடுத்து ஆதவனின் ஒளியைச் தன்னொளியில் அடக்கி சூரியனின் ஆணவத்தை அழிக்க, சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்றவனாகவும் ஆனான்.
சேஷன் மீது படுத்திருந்த பெருமாள் தமது கண்களிலிருந்த சூரியனின் ஒளியின்மையைக் கண்டு எழுந்தார். தேவர்கள் அனைவரும் அவரிடம் வந்து, சக்கராயுதத்தின் ஒளியால் சூரியன் ஒளியை இழந்து விட்டான் அதனால் உலகம் இருளில் மூழ்கியுள்ளது, கருணையுடன் காத்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்திலிருந்து ஸ்ரீ சக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு திருக்கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும், அருட்காட்சியளித்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்து அருள் செய்தார். சூரியன் ஸ்ரீ சக்கரபாணியை 13 ஸ்லோகங்களால் துதித்தார். அதன் மூன்றாம் ஸ்லோகம்
சக்ராம் புஜே ஸமாஸீனம் சக்ராத்யாயுத பூஷணம் !
சக்ர மந்த்ராதி தேவேசம் சக்ரராஜம் அஹம்பஜே!!
தன்னுடைய பெயரில் பாஸ்கர க்ஷேத்திரம் என இத்தலம் அமையப்பெற வேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீ சக்கரபாணி சுவாமிக்கு ஆலயம் நிர்மாணித்து பாஸ்கர க்ஷேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான். மேலும் சூரியனும் வைகாசி மாதத்தில் கொடியேற்றி பாஞ்சராத்ர ஆகம நெறிப்படி உற்சவமும் செய்வித்தான். இன்று ஸ்ரீ சுதர்சன சக்கரம் காவிரியில் தோன்றிய இடம் சக்கர தீர்த்தம் என்றும் சக்கர படித்துறை என்றும் வழங்கப்படுகின்றன.
வரலாற்றில் ஸ்ரீ சக்கரபாணிசுவாமி திருக்கோயில் தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி தனது மகளுக்கு ஏற்பட்ட உடல் நோய் நீங்க இத்திருக்கோயிலுக்கு வந்திருந்து ஸ்ரீ சுவாமியை வழிபட்டு உடல்நோய் நீங்கப்பெற்று குணமடைந்து மகளுக்காக மன்னர் சரபோஜி ஸ்ரீ சுவாமியின் பெருங்கருணையை எண்ணி வியந்து தானும், தனது மகளும் ஸ்ரீ சுவாமியை வழிபடும் வகையில் இருவரது திருவுருவ சிலைகளையும் சுவாமி சன்னதியில் இடம்பெறச் செய்ததாக வரலாறு.
ஸ்ரீ சக்கரபாணி சுவாமியை சூரியன், பிரம்மன், ஆகிர்புதன்ய மகரிஷி, அக்னிபகவான், அஷ்டதிக்கு பாலகர்கள் முதலியோர் அவரவருக்கு விருப்பமான பொருள்களைக் கொண்டு வணங்கி அருள் பெற்றதால், முக்கண் முதல்வனாக இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சக்கரபாணி சுவாமிக்கு செவ்வரளி, செம்பருத்தி, துளசி, குங்குமம் அர்ச்சனையுடன் வில்வம், மற்றும் வன்னி இலைகள் கொண்டு அர்ச்சனையும் செய்யப்படுகிறது. திருமஞ்சனம் மற்றும் சுதர்சன ஹோமம் இத்தலத்தில் செய்வதால் பிரார்த்தனைகள் நிறைவேறி மிக்க நலம் பெறுதல் பக்தர்களிடையே பிரசித்தி.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம் சக்கரபாணி கோயில் (சர்வதோஷ) நிவர்த்தித் தலம் பற்றி தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?
கோயில் நகரமாகத் திகழும் கும்பகோணத்திலுள்ள முக்கிய ஆலயங்களுள் சக்கரபாணி கோயிலும் ஒன்று. திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான சுதர்ஸனம் என்னும் சக்கரம் மூல புருஷனாக இவ்வாலயத்தில் தோன்றுகிறார்.
தல புராணம்
ஜலந்தரன் என்ற அசுரனை அடக்குவதற்காக மகாவிஷ்ணு தனது சக்கரப் படையை அனுப்பினார். இதே சமயம் கும்பகோணத்திலுள்ள ஒரு தீர்த்தக் கரையில் பிரம்மதேவன் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டுக் கடைசி முழுக்கைச் செய்து கொண்டிருந்தார். ஜலந்தரனை வதைத்த பின் சக்கரம் பிரம்மனின் கைக்கு வந்தது. பிரம்மன் சக்கரத்தை அங்குத் தீர்த்தத்தில் பிரதிஷ்டை செய்தார்.
சக்கரத்தின் ஒளியைக் கண்டு பொறாமை கொண்ட சூரியன் தனது ஒளியை அதிகரித்தான். இதனால் உலகம் வெப்பத்தால் துன்புற்றது. சக்கரம் சூரியனின் ஒளியைக் கவர்ந்து அவனது ஆணவத்தையடக்கியது. தவறையுணர்ந்த சூரியன் தீர்த்தக்கரையில் சக்கரத்தை வழிபட்டு இழந்த ஒளியை மீண்டும் பெற்றான். சக்கரபாணியாகக் காட்சியளித்த இடத்தில் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்தான். கதிரவன் அருள் பெற்றதால் இத்தலம் பாஸ்கர க்ஷேத்திரம் என்று பெயர் பெற்றது.
தீர்த்தச் சிறப்பு
இத்தலத்தில் உள்ள சக்கர தீர்த்தம் புண்ணிய நதிகளை விடப் புனிதம் மிகுந்தது. இதன் கரையில் அந்திமக் கிரியைகள், தான தருமங்கள் ஆகியவற்றைச் செய்வது விசேஷமானது. துலா மாதத்தில் இதில் நீராடினால் அதிக பலன் பெறலாம். காசியில் தனது தந்தையின் அஸ்திகளைக் கரைப்பதற்காகச் சூரியபந்து என்ற வேதியன் பயணமானான். செல்லும் வழியில் கும்பகோணத்தில் சக்கரப் படித்துறையில் நீராடினான். அவனது கண்களுக்கு அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் தாமரை மலர்களாகத் தென்பட்டன. சக்கர தீர்த்தத்தின் பெருமையை உணர்ந்த சூரிய பந்து அங்கேயே தனது தந்தையின் அஸ்திகளைக் கரைத்துவிட்டு ஈமச் சடங்குகளை நிறைவேற்றினான்.
ஆலயம் நுழைவாயிலுக்கருகே விஜயவல்லி, சுதர்சனவல்லி ஆகிய தேவியருடன் சக்கரபாணி சுதை வடிவில் காட்சியளிக்கிறார். கட்டுமலை போலமைந்துள்ள கருவறையை அடைய இரு புறங்களிலும் வாயில்கள் உண்டு. வடக்கு வாயில் உத்தராயண காலத்திலும் தெற்கு வாயில் தட்சிணாயண காலத்திலும் திறக்கப்படும்.
மூலஸ்தானத்தில் தீப்பிழம்புகள் போல் தோன்றும் தாமரைச் சக்கரத்தின் நடுவிலுள்ள ஷட்கோண வட்டத்தில் எட்டு கரங்களுடன் சாரங்கபாணி தோன்றுகிறார். சங்கு, சக்கரம், வில், கோடாரி, உலக்கை, சுதை, மண்வெட்டி, தாமரை ஆகியன அவரது கைகளிலும் உள்ளன. உடலில் பீதாம்பரம், விலைமதிப்புள்ள அணிகலன்கள் ஆகியன ஒளிவிடுகின்றன. அருகே சுதர்சனவல்லி தாயார், சூரியன், அக்கினி பிரம்மன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சக்கரத்தின் பின்புறத்தில் யோக நரசிம்மரைக் காணலாம்.
விஜயவல்லி தாயார், விஷ்வ சேனர், லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. நரசிம்மர், கருடர், ஹயக்கிரீவர், வராகம், ஆஞ்சநேயர் ஆகிய 5 முகங்களையுடைய பஞ்சமுக ஆஞ்சநேயர் உட்பகுதியில் இடம் பெற்றுள்ளார். வெளிப்பகுதியில் பிரம்மாண்டமாகத் தோன்றும் வீர ஆஞ்சநேயரைச் சிறந்த வரப் பிரசாதியாக மக்கள் வழிபடுகின்றனர்.
விழாக்கள், பிரார்த்தனைகள்
சக்கரபாணியின் தரிசனம் பெற்ற வைகாசி பௌர்னமியன்று ஆதவன் பெருவிழாவை நடத்தினான். மாசி மகம், கருடோற்சவம், திருக்கல்யாணம். பவித்ரோற்சவம் போன்ற விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. சிவனுக்குரிய நெற்றிக் கண்னைப் பெற்று 'ருத்ராம்சமாகச் சக்கரபாணி விளங்குவதால் ருத்திரனுக்குரிய திருநீறும் திருமாலுக்குரிய துளசியும் இங்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
சக்கரபாணியைக் குறிப்பிட்ட காலம் பிரதட்சணம் செய்து வழிபட்டால் நோயற்ற வாழ்வு. புத்திர பாக்கியம், நீண்ட ஆயுள் போன்ற பாக்கியங்கள் கைகூடும். கன்னிப் பெண்கள் ஒரு மண்டலக் காலம் வலம் வந்து வழிபட்டால் திருமணங்கள் நிறைவேறும். 49 நாள்கள் பிரதட்சணமாக வந்து வழிபடுவதுடன் உணவு வகைகளை நிவேதனமாகப் படைத்தால் நோய்கள் குணமாகும்.
தஞ்சை சரபோஜி மன்னர் இங்கு வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். நன்றிக் கடனாக ஆலயத்திற்குக் காணிக்கைகள் அளித்தார். இதன் நினைவாகச் சரபோஜி, அவரது பட்டத்தரசி ஆகியோரின் உலோகப் படிமங்கள் ஆலயத்தில் உள்ளன.
சக்கர வழிபாடு சிறப்பான பலன்களை அளிக்கவல்லது. இதற்கேற்ப சக்கரத்தை மூலவராகக் கொண்டுள்ள அபூர்வமான ஆலயம் இங்கு மட்டுமே உள்ளது. (மீள்பிரசுரம்)
சர்வதோஷ நிவர்த்தி தலம்
திருக்கோயிலின் பெருமையும், அருமையும் கோள்களின் நாயகன் சூரியன். சூரியன் இத்திருத்தல மூர்த்தியான ஸ்ரீ சக்கரபாணி சுவாமியிடம் சரணாகதி அடைந்ததால் நவகோள்களால் வரும் துன்பங்களும், சகல தோஷங்களும் சக்கரபாணியை வழிபட விலகுகின்றன. ஏழரை சனி, அஷ்டமத்து சனி, ராகு திசை மற்றும் கேது புத்தி இவைகளால் அல்லல்படுபவர்கள் இத்திருக்கோயில் வந்து இறைவனை வழிபட இன்னல்கள் விலகப் பெறுகிறார்கள். இத்திருக்கோயிலில் தொடர்ந்து ஏழு தினங்கள் வழிபட்டால் சிறைவாசம், சர்ப்பதோஷம், விலங்குகளால் ஏற்படும் தொல்லைகள் ஆகியன அகலும். இவ்வாறு குறிப்பிட்ட ஒரு தோஷத்திற்கு என்று இல்லாமல் எல்லா தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மகா சக்தி வாய்ந்த சுதர்சனராக இத்திருக்கோயில் பெருமாள் அருள்பாலிப்பதால் இத்திருக்கோயில் சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகின்றது.
திருக்கோயில் அமைவிடமும் சன்னதிகளும்
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியாக அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக உள் சென்றால் உற்சவகாலங்களில் சுவாமி எழுந்தருள எட்டுக்கால் மண்டபம் ஒன்றும் அதையடுத்து பலிபீடம் கொடிமரம் இவைகளுடன் அமைந்துள்ள எட்டுக்கால் மண்டபத்தின் வடபுறம் இத்தலத்து தீர்த்தமான அமிர்தபுஷ்கரணி என்னும் திருக்குளமும், இடது புறம் நாலுகால் மண்டபமும் அமையப் பெற்றுள்ளது.
கொடிமரத்தை அடுத்து முன் மண்டபமும், சிறிய கோபுரத்துடன் கூடிய வாயிலும் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் வடபுறம் தென்முக மண்டலமாக ஸ்ரீ ராமர் லட்சுமணர் சீதை இவர்களைத் தோளில் தாங்கியபடி உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேய சுவாமி சன்னதி உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சன்னதியின் இடது புறம் சுதர்சன பரம பக்தரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் சன்னதியும் வலது புறம் ஸ்ரீ ஆழ்வார்கள் சன்னதியும் உள்ளது.
முன் மண்டபத்தை அடுத்து 3 நிலை கட்ட கோபுரம் அமைந்துள்ளது. அடுத்து முதல் திருச்சுற்றைச் சேர்ந்த மண்டபம் உள்ளது. அதன் மையத்தில் கிழக்கு நோக்கிய துவார பாலகர்கள் உள்ளனர். இம்மண்டபத்தின் வடபுறம் திருபள்ளியறை, வாகன மண்டபம் மற்றும் பண்டக அறையும் தென்புறத்தில் திருமடப்பள்ளியும் அமையப் பெற்றுள்ளன. இம்மண்டபத்தை அடுத்து பக்கத்திற்கு ஒருவாயில் என ஸ்ரீ சக்கரபாணி சுவாமி சன்னதி உத்தராயண வாயில், தட்சிணாயன வாயில் என இரு வாயில்களுடன் மாடக்கோயில் அமைப்பில் அமைந்துள்ளது.
கட்டுமலை மீது அமைந்துள்ள கருவறையை அடைய வடக்கிலும், தெற்கிலும் உள்ள இருவாயில்களில் தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) சூரியன் தெற்கு நோக்கிப் பயணம் செய்யும் பொழுது தென்புற வாயில் திறக்கப்படுகிறது. கதிரவன் வடக்கு திசையில் செல்லும் உத்தாரயண காலத்தில் (தை முதல் ஆனி வரை) வடக்கு வாயில் திறக்கப்பட்டு தென்புறவாயில் மூடப்படுகிறது.
ஸ்ரீ சக்கரபாணி சுவாமி சன்னதி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவற்றுடனும் உள் திருச்சுற்று ஒன்றைக் கொண்டு விளங்குகிறது. ஸ்ரீ சக்கரபாணி சுவாமி எட்டு கைகளுடன், எட்டு கைகளிலும் எட்டு ஆயுதங்களுடனும், மூன்று கண்களுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீ சுதர்சன சக்கரம் பின்னால் விளங்க ஸ்ரீ சுதர்சனவல்லி தாயாருடன் இருந்து அருள் பாலிக்கின்றார். கருவறையின் உள்ளே இத்தலத்தில் ஸ்ரீசக்கரபாணி சுவாமியை வழிபட்ட பிரம்மன், சூரியன், அகிர்புதன்யமகரிஷி, அக்னி பகவான், மார்கண்டேயமகரிஷி ஆகியோர் புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். கருவறையை ஒட்டிய திருவுண்ணாழி எனப்பெறும் உள் திருச்சுற்றில் தென் பாகத்தில் ஸ்ரீலெக்ஷ்மி நரஸிம்மர் சன்னதியும், தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகப் பெருமானும் வடமேற்கு மலையில் பஞ்சமுக ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். மேற்கு கோஷ்டத்தில் லட்சுமி நாராயணரும், வடக்கில் வைகுண்டநாதரும் அமைந்து காட்சியளிக்கின்றனர்.
திருக்கோயில் நடைதிறப்பு மற்றும் திருவிழாக்கள்
இத்திருக்கோயிலில் வடகலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. அனுதினமும் காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் பின்னர் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் வழிபாட்டுக்குரிய நேரமாகத் திறந்திருக்கும். தினமும் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்திருக்கோயிலில் மாதந்தோறும் மக நட்சத்திரத்தில் ஸ்ரீ சுவாமி புறப்பாடும், பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உற்வசமும், சித்திரையில் அட்சயதிருதியையில் கருடசேவையும், ரதசப்தமியும், வைகாசி விசாகத்தில் தெப்போற்சவமும், ஆவணியில் பவித்ரோற்சவமும் புரட்டாசியில் நவராத்திரி, விஜய தசமி உற்சவங்களும், கார்த்திகை மாதத்தில் தீபோற்சவமும், மாசியில் மாசிமக பிரம்மோத்ஸவமும் திருத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
சித்திரை மாதத்தில் குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத மஹா உற்சவத்தின்போது சாரங்கபாணி சுவாமியுடன் சேர்ந்து ஸ்ரீ சக்கரபாணி சுவாமியும் இருவருமாக இணைந்து தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
எப்படிச் செல்லலாம்?
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் சக்கரபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. பேருந்து, ஆட்டோ, கார் மூலம் கோயிலை அடையலாம்.