சிறப்புச் செய்திகள்

முல்லைப் பெரியாறில் புதிய அணையா?

மா. பிரபாகரன்


முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என கேரள உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் உறுதியளித்துவருவது தமிழக விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை  ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. கடந்த 1979 - ஆம் ஆண்டில் கேரள பத்திரிகை ஒன்றில் முல்லைப்பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாக பொய்யான செய்தி வெளியிட்டதன் பேரில் அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தை 152 அடியிலிருந்து, 136 அடியாக கேரள அரசு குறைத்தது.

அதன்பின்னர், கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் 5 மாவட்ட விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களினாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்தினாலும் 27.2. 2006- இல் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை, 142 அடிக்கு உயர்த்திக்கொள்ள அனுமதித்து உத்தரவிட்டது.  அருகே உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் அனுமதித்து உத்தரவிட்டது.

அதன்பிறகும் கேரள அரசு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி ஆக உயர்த்தவிடாமல் தடுக்க, 2006- இல் கேரள நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டம் செல்லாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தது. 2014 - இல், அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கவும், மத்திய அரசு பிரதிநிதி தலைமையில் தமிழக, கேரள அரசு பிரதிநிதிகளைக் கொண்டு மூவர் குழு அமைத்து கண்காணிக்கவும், பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பின் அணையில் 4 முறை 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கேரள அரசியல் கட்சியினர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களும் சேர்ந்து மீண்டும் அணை பலமிழந்துவிட்டதாகக்கூறி, அதன் அருகே புதிய அணை கட்டவேண்டும் என கோரி வருகின்றனர். இதனால் பெரியாறு அணைக்கு கீழ்புறம் சுமார் 350 மீட்டர் தொலைவில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று அதற்கான வேலைகளையும் தொடங்கிய நிலையில், புதிய அணை திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கேரளத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்துவருகின்றன. இது 5 மாவட்ட விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்.காட்சிக்கண்ணன் - திருப்பதிவாசகன்

இது பற்றி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மண்டலச் செயலாளர் அ.திருப்பதிவாசகன் கூறியது:  

முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக கேரள அரசுக்கு சாதகமாகச் செயல்படுவது கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முழுக்கவனம் செலுத்தி மத்திய அரசிடமும் உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு, முல்லைப்பெரியாறு பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். புதிய அணை கட்ட முயற்சி தொடருமாயின் தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் தொடங்க இருக்கிறோம் என்றார்.

5 மாவட்ட விவசாய சங்க நிர்வாகி பொன்.காட்சிக்கண்ணன் கூறியது: தொடர்ந்து கேரள அரசு மற்றும் அரசியல் கட்சியினர் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் புதிய அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து, ராமநாதபுரத்திலிருந்து சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் ஜோதி ஏந்தி நடைபயணம் நடைபெறும் 
என்றார்.

பறிபோகும் 6 டிஎம்சி தண்ணீர்
முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடியாகும். இதில் 152 அடி வரை தண்ணீ தேக்கலாம். அணையின் "டெட் ஸ்டோரேஜ்' அதாவது தரையிலிருந்து, 104 அடி உயரம் வரை கிட்டத்தட்ட 5 டிஎம்சி தண்ணீரை நாம் எடுக்க முடியாது. இதில் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கினால் தண்ணீர் கொள்ளளவு 15 டி.எ.ம்.சி. யாகும். இதில் டெட் ஸ்டோரேஜ் 5 டி.எம்.சி. போக சுமார் 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைக்கும். அணையில் கடந்த 1979 முதல் 136 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கியதால் சுமார் 5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைத்து வந்தது. புதிய அணை முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ்புறம், 350 மீட்டருக்கு அப்பால் கட்டப்படும். அந்த அணை கட்டிவிட்டால் முல்லைப்பெரியாறு அணையில் சுமார் 130 அடிக்கு மட்டும் தண்ணீர் தேக்கமுடியும். இதன் மூலம் 5 மாவட்டங்களுக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT