சிறப்புச் செய்திகள்

புழுதிவாக்கத்தில் 1 லட்சம் சதுர அடியில் 10 ஆயிரம்  மரக்கன்றுகள்

DIN


சென்னை:  சென்னையை பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட புழுதிவாக்கத்தில் 1 லட்சம் சதுர அடியில் மியாவாக்கி முறையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

நகரமயமாக்கல் மற்றும் வார்தா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையின் இயற்கைச் சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டது. தேசிய அளவில் நகரங்களின் மொத்த பரப்பளவில் பசுமைப் பரப்பு 24.56  சதவீதமாக நிர்ணியிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பரப்பளவில் பசுமை பரப்பு 15 சதவீதமாக உள்ளது. 

சென்னை மாநகரின் பசுமைப் பரப்பளவை உயர்த்தவும், எதிர்காலத்தில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டம் ஆகியவற்றின்கீழ், மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மாநகராட்சி முன்னெடுத்தது. 

இதன் தொடக்கமாக அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டூர்புரத்தில் 23,000 சதுர அடி பரப்பளவில்  கழிவுகள்  கொட்டப்பட்டிருந்த இடத்தில் அடர்வனம் அமைக்கப்பட்டது. வளசரவாக்கம் ராயலா நகர்,  முகலிவாக்கம், மூலக்கொத்தளம் மயானப் பகுதி உள்ளிட்டவற்றில் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது, பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட புழுதிவாக்கம் பாலாஜி நகரில் 1 லட்சம் சதுர அடியில் சுமார் 10 ஆயிரம் நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ் கூறுகையில், நகரின் பசுமையை மீட்டெடுக்கும் வகையில் மியாவாக்கி முறையில் காடுகள் அமைக்கும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக காலியாக உள்ள மாநகராட்சி இடங்கள், சாலையோர காலி இடங்கள்,  ஆக்கிரமிப்பு நிலங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. நிலங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, அங்கு வனம் அமைக்கப்பட உள்ளது.  தற்போது,  புழுதிவாக்கம் பாலாஜி நகரில் இருந்த மாநகராட்சி சொந்தமாக 1 லட்சம் சதுர அடி இடம் தூய்மைப்படுத்தப்பட்டு,  பெடரல் வங்கி நிதி உதவியுடன் நீர் மருது, நாவல், புன்னை, இலுப்பை,  பலா, வேங்கை,  வேம்பு,  மரவல்லி,  தேக்கு,  அகத்தி, அசோக மரம், பனை மரம் உள்ளிட்ட  சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு வகை மரங்கள் நடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து சோழிங்கநல்லூரில் சுமார் 2,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்றார்.

மியாவாக்கி என்றால் என்ன?
மியாவாக்கி என்ற நகர்ப்புற காடுகள் வளர்ப்பு முறையானது ஜப்பானிய தாவரவியல் நிபுணர்அகிரா மியாவாக்கி என்பவரால் கண்டறியப்பட்டது. ஒரே இடத்தில் அடர்த்தியான, மண்ணின் தன்மைக்கு ஏற்ப 30 டஜன் நாட்டு வகை மரங்களை வளர்க்கலாம்.

இந்த முறையில் வளர்க்கப்படும் மரங்கள் சாதாரண மரங்களை விட 10 மடங்கு அதிக வளர்ச்சியும், 30 மடங்கு அதிக அடர்த்தியும் கொண்டதாக இருக்கும். இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களுக்கு முதல் மூன்று வருடங்களுக்குப் பிறகு எந்தவொரு பராமரிப்பு பணிகளும் தேவைப்படாது. இந்த மரங்கள் முதல் ஆண்டில் 11.7 டன் கரியமில வாயுவை உறிஞ்சி, 4 டன் ஆக்ஸிஜனையும், நன்கு வளர்ந்த பிறகு ஆண்டுக்கு 43.5டன் கரியமில வாயுவை உறிஞ்சி 200 டன் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT