ஆலன் குர்தியின் நினைவாக... 
சிறப்புச் செய்திகள்

மறக்க முடியுமா? ஆலன் குர்தி மறைந்து 5 ஆண்டுகள்!

உலக வரலாற்றில் மறக்க முடியாத புகைப்படங்களின் வரிசையில் இடம் பெற்ற படம் இது. கோடானுகோடி மக்களின் மனசாட்சியைப் பார்த்த கணத்திலேயே உலுக்கிய காட்சி இது

ததாகத்

உலக வரலாற்றில் மறக்க முடியாத புகைப்படங்களின் வரிசையில் இடம் பெற்ற படம் இது. பார்த்த கணத்திலேயே கோடானுகோடி மக்களின் மனசாட்சியை உலுக்கிய காட்சி இது - அகதியாகப் புறப்பட்டு சடலமாகக் கிடந்த ஒற்றைச் சிறுவனின் படம். 

இந்தக் கருணையற்ற மரணம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன (செப். 2, 2015). இன்னமும் அகதிப் பிரச்னைகள் முடிந்தபாடில்லை. ஆனால், புதிதுபுதிதாக உலகத்துக்கு வேறு வேறு பிரச்னைகள்!

ஜெர்மனியில் பெர்லின் நகரில் ஆலன் குர்தி என்ற அந்தச் சிறுவனுடைய மரணத்தை நினைவுகூரும் வகையில் ஒரு சிறு பொம்மைப் படகையும் சுற்றி சுமார் 200-க்கும் அதிகமான ஜோடி காலணிகளையும் அடுக்கிவைத்திருந்தனர்.

துருக்கியிலிருந்து கிரீஸுக்கு மத்திய தரைக் கடல்வழி சிறிய ரப்பர் படகொன்றில் அகதிகளாகப் புறப்பட்டவர்கள், படத்தில் கிடக்கும் 3 வயதுச் சிறுவன் ஆலன்  குர்தியும் அவனுடைய 5 வயதுச் சகோதரன் காலிப், இவர்களுடைய தாய் ரெஹானா ஆகியோர்.

இவர்கள் சிரியாவைச் சேர்ந்த அகதிகள். எப்படியாவது ஐரோப்பாவைச் சென்றடைந்துவிட வேண்டும் என்று புறப்பட்டவர்கள். எட்டு பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 16 பேர் இருந்திருக்கின்றனர். அவர்களிடம் உயிர்க் காப்பு சாதனங்கள் எதுவுமில்லை. அவர்கள் அணிந்திருந்த "லைப்ஜாக்கெட்கள்" தரமற்ற போலிகள்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு கவிழ்ந்துவிட்டிருக்கிறது. கரையில் ஒதுங்கியது குர்தியின் உடல். இந்தப் படத்தை எடுத்தவர் துருக்கி பத்திரிகைப் புகைப்படக்காரர்  நிலூபர் டெமிர். துயரம் மிக்க இந்தப் படத்துடன் உலகம் முழுவதும் பெரும்பாலான நாளிதழ்களில் தலைப்புச் செய்தி.

இந்த விபத்தில் தாயும் இரு மகன்களும் இறந்துவிட்டனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கு இங்கு என அலைந்துதிரிந்து வசித்த இவர்கள், துருக்கிக்கு இடம்பெயர்ந்து வசித்துவந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில்தான் சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல இவர்கள் முயன்றுள்ளனர்.

இவர்களுடைய உறவினர் ஒருவர் ஸ்பான்சர் செய்ய, கனடாவுக்கு அகதிகளாகச் செல்ல இவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனினும், கனடா அரசு மறுத்துவிட்ட நிலையில்தான் ஐரோப்பாவழி வேறெங்கேனும் செல்லும் முயற்சியில் இந்த விபரீதம் நேரிட்டது. 

இன்னமும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஏதோ ஒரு நாட்டுக்கு ஒவ்வொரு நாளும் மக்கள் புலம்பெயர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள் -  சட்டப்படியும், சட்ட விரோதமாகவும்,  உள்நாடுகளிலேயும்கூட. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள். வழியில் எத்தனையோ உயிரிழப்புகள்.

இத்தகைய உயிரிழப்புகளின் அடையாளம் ஆலன் குர்தி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்றார் வைஷாலி!

பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT