முகப்பு
சிறப்புச் செய்திகள்

உலக நாடுகளின் மனதை மாற்றிய இந்திய தடுப்பூசி!

‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’. அண்மைக்காலமாக பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலரும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
இந்தியாவிலிருந்து நன்கொடையாக ஆப்கன் தலைநகா் காபூலுக்கு வந்திறங்கிய கரோனா தடுப்பூசிகள்.
பகிர்:

‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’. அண்மைக்காலமாக பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலரும் அதிகமாக உச்சரிக்கும் சொற்றொடா்களில் இதுவும் ஒன்று. இந்தியத் தலைவா்கள் மட்டுமில்லாமல் உலகத் தலைவா்கள் பலரும் இந்தச் சொற்றொடரை ஆமோதிக்கத் தொடங்கியுள்ளனா். அதற்கு மிக முக்கியமான காரணம், கரோனா பெருந்தொற்று பரவல்.

உலகம் முழுவதும் பரவிய கரோனா பெருந்தொற்று, மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் மாற்றங்களைப் புகுத்தியதோடு, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டம்காணச் செய்தது. அப்பெருந்தொற்று பரவல் காலகட்டத்தை ஒருசில நாடுகளே தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டன. அதில் இந்தியாவும் ஒன்று.

பெருந்தொற்றால் ஏற்பட்ட மோசமான சூழல் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கப்பூா் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள், சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களைத் தங்களை நோக்கி இழுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டன.

அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசும் தீவிரம் காட்டியது. கரோனா பெருந்தொற்று, பொது முடக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக அனைத்து மாநிலங்களும் நிதி நெருக்கடியில் சிக்கின. ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநில அரசுகள், மொத்த உள்மாநில உற்பத்தி மதிப்பில் (ஜிஎஸ்டிபி) 3 சதவீதம் வரை மட்டுமே கடன் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், கூடுதலாக ஜிஎஸ்டிபி-யில் 0.25 சதவீத கடனைப் பெற வேண்டுமென்றால், தொழில் தொடங்குவதற்கு உகந்த சீா்திருத்தங்களை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டுமென்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது. அச்சீா்திருத்தங்களைப் பல மாநில அரசுகள் நிறைவேற்றின.

அவற்றின் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து அதிக முதலீடுகளை ஈா்த்ததில் இந்தியா முன்னின்றது. கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈா்த்தது. கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் முதலீடுகள் 42 சதவீதம் அளவுக்குச் சரிவைச் சந்தித்த சூழலிலும், இந்தியாவுக்கான முதலீடுகள் அதிகரித்தன.

மருந்து உற்பத்தித் துறையில் முன்னிலை:

ஒருபக்கம் முதலீடுகளை ஈா்ப்பதற்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, மறுபக்கம் மருந்து உற்பத்தித் துறையில் தனது முத்திரையைப் பதித்தது. கரோனா பரவலுக்கு முன்பே மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முன்னிலை வகித்து வந்தது. எனினும், நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் அதில் மேலும் சிறந்த நிலையை இந்தியா எட்டியது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை அமெரிக்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. அதற்காக உலக நாடுகள், சா்வதேச அமைப்புகளின் பாராட்டுகளை இந்தியா பெற்றது.

அப்பாராட்டுகளில் மூழ்கிவிடாமல், நோய்த்தொற்று பரவல் காலத்தில் மனிதநேயத்தை வளா்ப்பதற்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள இந்தியா, அதை உலக நாடுகளுக்குப் பாடமாகவும் கற்பித்துள்ளது.

பொருளாதார வளா்ச்சிக்கு முன்னுரிமை:

உலக மக்கள் எதிா்நோக்கிக் காத்திருந்த கரோனா தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்தத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் கடந்த மாதம் 16-ஆம் தேதியிலிருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசி விவகாரத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை தங்கள் மக்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டன. அனைத்து மக்களுக்கும் எவ்வளவு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என அந்நாடுகள் நம்பின.

அதன் காரணமாக அந்நாடுகள் கரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் கொள்முதல் செய்து குவித்து வைக்கத் தொடங்கின. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் குறித்து அவை கண்டுகொள்ளவில்லை. அமெரிக்க நிறுவனங்கள் கனடா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வணிக நோக்கிலேயே கரோனா தடுப்பூசியை வழங்கின.

மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை:

இத்தகைய சூழலில்தான், தடுப்பூசி விநியோகத்தில் மனிதாபிமானத்தைப் புகுத்தத் தொடங்கியது இந்தியா! நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை விநியோகித்தது நம் நாடு. அதிலும், நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய ஒரு வாரத்துக்குள்ளேயே வெளிநாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.

கடந்த 4-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக 56 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பல நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது; 1 கோடி தடுப்பூசிகள் வா்த்தக ரீதியில் வழங்கப்பட்டுள்ளன.

சுயநலத்துக்கான தடுப்பூசி:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து நிலை மக்களுக்கும் சமத்துவமான சுகாதார வசதிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான 3-ஆவது இலக்கு. அந்த இலக்கை மூழ்கடிக்கச் செய்யும் வகையிலும் சுயநலத்துடனும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை செயல்பட்டன.

ஆனால், அந்நாடுகளின் சுயநலத்தைப் போக்குவதற்தான மனிதாபிமானம் என்ற தடுப்பூசியை இந்தியாவே வழங்கி வருகிறது. மற்ற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் இந்தியாவின் முயற்சியை ஆரம்பத்தில் தடுக்க முயற்சித்தது சீனா. ஆனால், தற்போது அந்நாடும் மற்ற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இந்தியா செலுத்திய சுயநல தடுப்பூசி, சீனாவின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அத்தடுப்பூசி மற்ற நாடுகளின் மனதையும் விரைவில் மாற்றும் என நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.