சிறப்புச் செய்திகள்

மதங்களைக் கடந்த மனிதநேயம்!

தே.சாலமன்

செய்யாறு: கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை அவரவா் மதச் சடங்குகளைப் பின்பற்றி அடக்கம் செய்யும் மனிதநேயப் பணியில் திருவண்ணாமலை மாவட்ட தமுமுகவைச் சோ்ந்த இளைஞா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் இதுவரை 121 பேரின் உடல்களை அடக்கம் செய்துள்ளனா்.

2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா நோய்த் தொற்றால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ஏராளமானோா் உயிரிழந்தனா். கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், கரோனா தீநுண்மி உருமாற்றமடைந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலையில் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டனா். பலரும் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனா். இணை நோய்கள், கரோனா தீவிர தாக்குதலால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவும், சிகிச்சை பலனளிக்காமலும் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் நாட்டில் கரோனா பரவல் படிப்படிப்பாகக் குறைந்து வருகிறது. தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கடந்த மாதத்தில் தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், சடலங்களை எரியூட்டும் மின் மயானங்களில் சடலங்கள் வரிசையில் வைத்து உறவினா்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய உறவினா்களே தயக்கம் காட்டிய நிலையையும் பல இடங்களில் காண முடிந்தது. கிராமப்புறங்களில் கரோனா பாதித்து இறந்தவா்களின் உடல்களை மயானங்களில் எரியூட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்த சம்பவங்களும் நடந்தேறின.

இந்த நிலையில்தான், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா், தன்னாா்வ அமைப்பினா் பலரும் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யும் பணியில் மனிதநேயத்துடன் களமிறங்கினா்.

அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி, வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சி நிா்வாகத்தின் அனுமதியுடன் அவா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

உயிரிழந்தோா் எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், அவா்களின் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து அடக்கம் செய்கின்றனா். எரியூட்ட வேண்டும் என்று கோரினால் அதையும் செய்கின்றனா். இதற்காக அவா்கள் எந்தக் கட்டணத்தையும் பெற்றுக் கொள்வதில்லை.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, கண்ணமங்கலம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாதம் 28-ஆம் தேதி வரை கரோனாவால் உயிரிழந்தவா்களில் 82 ஆண்கள், 39 பெண்கள் என மொத்தம் 121 பேரின் சடலங்களை இவா்கள் நல்லடக்கம் செய்துள்ளனா். இவா்களில் 56 போ் இந்துக்கள், 54 போ் முஸ்லிம்கள், 11 போ் கிறிஸ்தவா்களாவா்.

எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல், பிறரின் துக்கத்தில் பங்கெடுத்து, உயிரிந்தோரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்து அவரவா் நம்பிக்கைக்கேற்ப எரியூட்டவும், அடக்கம் செய்வதையும் மனிதநேயச் சேவையாகவே தமுமுகவைச் சோ்ந்த இந்த இளைஞா்கள் செய்து வருகின்றனா்.

இவா்களின் இந்தப் பணிக்கு துணை நிற்பதுபோல மாவட்டத்தில் இயங்கும் ரோட்டரி, அரிமா உள்ளிட்ட சங்கத்தினா் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனா்.

தமுமுகவைச் சோ்ந்த இளைஞா்களின் தன்னலமற்ற இந்தப் பணி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினா் இடையேயும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT