சிறப்புச் செய்திகள்

பா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

தத்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடப் போவது யார்?

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து, வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஆளும் கூட்டணியின்  சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்கிற பேச்சும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின்போதே பேசப்பட்டவர்களில் ஒருவரும் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தவருமான திரௌபதி முர்மு, இந்த முறையும் போட்டியிட வாய்ப்புள்ள மிக முக்கியமான ஒருவராகப் பேசப்படுகிறார்.

திரௌபதி முர்மு -  பிரதமர் மோடி

ஒடிசாவிலுள்ள சந்தால் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான முர்மு,  2015-ல் ஜார்க்கண்ட் ஆளுநராகப் பொறுப்பேற்று முழுமையாக ஐந்து ஆண்டு காலம் பதவி வகித்தவர். ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடன் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தபோது, சுமார் நாலாண்டு காலம் இவர் துணை அமைச்சராகவும் இருந்தார்.

மேலும், தற்போது ஆளுநர்களாக இருக்கும் சிலருடைய பெயர்களும்  போட்டிக்கான பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனந்திபென் படேல் -  பிரதமர் மோடி

கேரளத்தின் ஆளுநரான ஆரிப் முகமது கான், உத்தரப் பிரதேச ஆளுநரும் குஜராத்தின் முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேல், சட்டீஸ்கர் ஆளுநர் அனுசுயா உக்கி,  கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஆகியோரும் பேசப்படுகின்றனர்.

இவர்கள் அல்லாமல் தெலங்கானாவின் ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) ஆகவும் இருப்பவரான தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் பெயரும் பட்டியலில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான இவருடைய செயல்பாடுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

தமிழிசை -  பிரதமர் மோடி 

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், முஸ்லிம் அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

எனவே, திரௌபதி முர்முவுக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.  பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் மட்டுமின்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் நல்ல நட்பில் இருப்பவர் முர்மு.

மக்களவைத் தேர்தலும் ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்களும் வரவுள்ள நிலையில் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகளைக் கருத்தில்கொண்டு, முர்முவை வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

பிரதமர் மோடி - அனுசுயா உக்கி

நபிகள் நாயகம் தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் காரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்திய அரசுக்கும் எதிராக முஸ்லிம் நாடுகள் கருத்துத் தெரிவித்து நெருக்கடியை உருவாக்கிவரும் நிலையில், முஸ்லிமான ஆரிப் முகமது கானை நிறுத்திக் குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் எளிதில் நற்பெயரை ஆளும்  கூட்டணியால் பெற இயலும் என்றும் கருதப்படுகிறது.

ஆனந்திபென் படேல் பெயர் வலம்வந்தாலும் வாய்ப்புக் குறைவு என்றே கருதப்படுகிறது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் குஜராத்திகளாக இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவரும் குஜராத்தைச் சேர்ந்தவராகவே இருக்க முடியுமா? என்பது பலமான கேள்வி.

இதனிடையே, எதிர்க்கட்சிகளுடன் பேசி, போட்டியில்லாமல், ஒருங்கிணைந்து பொதுவான ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது பற்றியும் பாரதிய ஜனதா வட்டாரங்களில் யோசிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT