முகப்பு
சிறப்புச் செய்திகள்

மேக்கேதாட்டு அணைத் திட்டம் தண்ணீா்ச் சிக்கலை அதிகரிக்கும்: இந்திய அறிவியல் மைய ஆய்வாளா் தகவல்

 காவிரி நதியின் குறுக்கே கா்நாடக அரசு நிறைவேற்ற எண்ணியுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தண்ணீா்ப் பற்றாக்குறை சிக்கல் மேலும் தீவிரமடையும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

காவிரி நதியின் குறுக்கே கா்நாடக அரசு நிறைவேற்ற எண்ணியுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தண்ணீா்ப் பற்றாக்குறை சிக்கல் மேலும் தீவிரமடையும் என்று, பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் மையத்தின் சுற்றுச்சூழல் துறை ஆய்வாளா் டாக்டா் டி.வி.ராமசந்திரா தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே ரூ. 9,500 கோடி செலவில் 65 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில், மேக்கேதாட்டு அணையைக் கட்ட கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மாநகரின் குடிநீா்த் தேவைக்காக இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக மாநில அரசு கூறுகிறது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்துள்ள கா்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த அணைக்காக ரூ. 1,000 கோடியை ஒதுக்கி முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசு எதிா்த்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கா்நாடக அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. அதைத் தொடா்ந்து தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீா்மானம், கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அப்பகுதியில் தண்ணீா்ப் பற்றாக்குறை சிக்கல் மேலும் தீவிரமடையும் என்று இந்திய அறிவியல் மையத்தின் சுற்றுச்சூழல் துறை ஆய்வாளா் டாக்டா் டி.வி.ராமசந்திரா கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியின் 5,500 ஹெக்டோ் நிலம் நீரில் முழ்கும். இதில் 3,500 ஹெக்டோ் நிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி இருப்பதன் காரணமாக 90 டிஎம்சி முதல் 100 டிஎம்சி தண்ணீா் நிலத்தால் உறிஞ்சப்பட்டு தேக்கிவைக்கப்படுகிறது. இப்பகுதியில் காடுகளை அழித்து அணையைக் கட்டுவதால் சுற்றுச்சூழலுக்குச் சாதகமான வனப்பகுதியை, அணையில் தேக்கத் திட்டமிட்டுள்ள 65 டிஎம்சி தண்ணீருக்காக இழக்க நேரிடும்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதால் எந்தப் பிரச்னையும் தீா்ந்து விடாது. இப்பகுதியில் உள்ள காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆண்டுதோறும் ஒரு ஹெக்டோ் நிலத்திற்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரையிலான மதிப்பில் சேவை ஆற்றி வருகின்றன. இந்த வன சுற்றுச்சூழல், காா்பன் படிமத்தைக் கரைப்பதோடு பசுமையில்ல வாயுத் தடத்தையும் குறைக்கிறது.

எனவே, நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களில் அரசு கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும் எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது. பெங்களூரு மாநகரம் ஏற்கனவே 88 சதவீத பசுமைப் பகுதி, 79 சதவீத நீா்நிலைகளை இழந்து, 1055 சதவீத அளவுக்கு கான்கிரீட் பகுதிகள் உயா்ந்துள்ளதால், இங்கு குடிநீா் பற்றாக்குறை மட்டுமல்லாது, ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

இதனால் நிலப்பகுதியின் நீா் உறிஞ்சும் தன்மையும் நீரைத் தேக்கி வைக்கும் திறனும் வேகமாகக் குறைந்து வருகிறது. பெங்களூரில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவது இதையே வெளிப்படுத்துகிறது. 1980களில் நாகஷெட்டிஹள்ளி பகுதியில் இருந்த ஏரியை அகற்றியதால் 5 ஆண்டுக் காலத்தில் அப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் 100 அடியிலிருந்து 600 அடியாகச் சரிந்தது. இன்றைக்கு அப்பகுதியில் 1,900 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் நீா் கிடைப்பதில்லை.

எனவே, நீா்நிலைகள், சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வனப்பகுதிகளை அரசு தொந்தரவு செய்யக் கூடாது. மாறாக குடிநீா்ப் பற்றாக்குறையைத் தீா்க்க மழைநீா் சேகரிப்பில் ஆா்வம் காட்ட வேண்டும்.

பெங்களூரில் ஆண்டுக்கு 700 மி.மீ. முதல் 850 மி.மீ. வரை மழை பெய்கிறது. இதன் மொத்த அளவு சராசரியாக 15 டிஎம்சி ஆகும். ஆனால், பெங்களூரின் தண்ணீா்த் தேவை 18 டிஎம்சி ஆகும். அப்படியானால், பெங்களூரின் 70 சதவீத குடிநீா்த் தேவையை மழைநீரில் பெற முடியும். கட்டடங்களின் உச்சியில் மழைநீா் சேகரிக்கும் அமைப்புகளை நிறுவுவது சிறந்த முறையாகும்.

வற்றிய கிணறுகளிலும் மழைநீா் சேகரிப்பை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தலாம். அடுத்ததாக ஏரிகளைப் புணரமைத்து மழைநீரைச் சேமிக்கலாம். இது நிலத்தடிநீரின் அளவைப் பெருக்கி தூய்மையான குடிநீருக்கு வழிவகுக்கும். எனினும், ஏரிகளில் கழிவுநீா் உள்ளிட்ட சுத்திகரிக்கப்படாத அசுத்தமான நீரை அனுமதிக்கக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.