சிறப்புச் செய்திகள்

தரைமட்டமாக்கப்பட்ட தஞ்சை: அழிவிலிருந்து மீண்ட வரலாறு!

DIN


முத்தரையர்களிடம் இருந்து ஏறத்தாழ கி.பி. 850 ஆம் ஆண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றினர் பிற்காலச் சோழர்கள். அதில் இருந்து சோழர்களின் தலைநகரமாகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய பிற்காலச் சோழர்களின் ஆட்சி ராசராசன் காலத்தில் உயர்ந்த நிலையை எட்டியது. தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு 176 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் பிற்காலச் சோழர்கள்.

இதையடுத்து, தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான் ராஜேந்திர சோழன். அதிலிருந்து தஞ்சாவூரின் பெருமை சரியத் தொடங்கியது. படிப்படியாக முக்கியத்துவத்தை இழந்த தஞ்சாவூர் நகரம் பாண்டியர்களின் பகையால் அழிவின் உச்சத்துக்கேச் சென்றது.

தன் நகரத்துக்குச் சோழனால் விளைந்த அவமானத்தைப் போக்க முனைந்தான் பாண்டிய மன்னன். அதன் விளைவே தஞ்சாவூரில் இருந்த சோழர் அரண்மனையும், நகரமும் மண்ணோடு மண்ணாகின. 

 தஞ்சாவூர் அரண்மனை அருகே கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயில்

மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலசேகர பாண்டியன் சோழ நாட்டுடன் மோதத் தொடங்கினான். ஏற்கெனவே, இரு முறை பாண்டியர்களை வென்று அடக்கிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு இப்படையெடுப்பு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. பேராற்றல் படைத்த சோழர் படை பாண்டிய நாட்டில் மட்டியூர், கழிக்கோட்டை போன்ற இடங்களில் பகைவருடன் மோதியது. குலசேகரப் பாண்டியனின் படைகள் பேரழிவுக்கு உள்ளாகிப் புறங்காட்டி ஓடின.

இதையடுத்து, குலோத்துங்க சோழன் மதுரை நகருக்குள் புகுந்து, மாட மாளிகைகளையும், அரண்மனைகளையும் அழித்தான். புறமதில் அழிந்தது. பாண்டியனின் கூட மண்டபத்தை இடித்து தரைமட்டமாக்கிக் கழுதை கொண்டு ஏர் உழுது, வரகினை விதைத்தான். எனவே, மதுரை நகரின் பழம்பெருமை வாய்ந்த மதில்களும், அரண்மனையும் அழிந்தன.

மூன்றாம் குலோத்துங்க சோழன் இறந்த பிறகு கி.பி. 1218 ஆம் ஆண்டில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். உறையூரையும், தஞ்சாவூரையும் தீயிட்டு அழித்தான். சிவாலயமான பெரிய கோயிலைத் தவிர்த்து கூடமும், மாமதிலும், அரண்மனைக் கோபுரங்களும், ஆடலரங்குகளும், மாட மாளிகைகளும், மண்டபங்களும் அடித்து தூள் தூளாக்கப்பட்டன. 

இதையும் படிக்க |  சோழர் கால அரண்மனை எங்கே?

சாமந்தான் குளம் (தற்போது பொலிவுறு நகரத் திட்டத்தில் பொலிவு பெற்றுள்ளது)


தஞ்சாவூர் நகரைச் செந்தழல் இட்டுக் கொளுத்தியபோது இங்கிருந்த அரண்மனையைத் தரைமட்டமாக இடித்துத் தள்ளி, அங்கு கழுதை கொண்டு ஏர் உழுது வரகும் விதைத்தான். இதனால், தஞ்சை அழிந்தது.

கி.பி. 850 சோழர் தலைநகரமாக உதயமான தஞ்சாவூர் கி.பி. 1014-க்குப் பிறகு பொலிவிழந்து, கி.பி. 1218 ஆம் ஆண்டில் தரைமட்டமானது. அதாவது 368 ஆண்டுகளே நிலைத்திருந்தது.

பாண்டியரின் படையெடுப்பால் அழிந்த தஞ்சை நகரமும், கோட்டையும் மீண்டும் 1311 ஆம் ஆண்டு மாலிக்காபூரின் படையெடுப்பின்போது மேலும் அழிவுக்கு உள்ளானது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தது:

சோழர் காலத்தில் வடக்கில் கரந்தை, கிழக்கில் குயவர் தெரு, மேற்கில் மேலவெளி வரையிலும் குடியிருப்புகள் பரவி இருந்தன. தெற்கில் காட்டுப்பகுதியாக இருந்தது. தஞ்சை நகரின் மையப்பகுதியில் அரண்மனை, படைகலனைச் சார்ந்த ஊழியர்கள் வசித்து வந்தனர். இதன் அடிப்படையில் கடைவீதிகளும், வணிகர்களும் இருந்தனர். 

இதையும் படிக்க |  பழையாறை - கிராமமாக மாறிய தலைநகரம்!

தஞ்சாவூரில் இருந்த சோழர்களின் தலைநகரம் ராஜேந்திர சோழன் காலத்தில் 1024-ம் ஆண்டில் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றியபோதே முழுத் தஞ்சை நகரமும் புலம்பெயர்ந்தது. அப்போதே தஞ்சாவூர் பெருநகரம் என்ற தகுதியை இழந்தது. 

அழிவுக்கு பிறகு மீளத் தொடங்கிய கீழ அலங்கம் சாலை

எஞ்சி இருந்த அரண்மனையையும், அரசுக் கேந்திரங்களையும் பாண்டியர்கள் அடித்து நாசப்படுத்தி தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது இருந்த மன்னர்கள் எந்த இடத்திலும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை. எனவே, தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அப்போது இருந்த அரண்மனை அமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது. இதனால், தஞ்சை நகரம் கிட்டத்தட்ட பாலைவனம் போல காட்சியளித்தது. 

இதையடுத்து, பாண்டிய மன்னனின் தளபதிகளில் ஒருவரான சாமந்த நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற புதிய நகரை உருவாக்கினான். 

சாமந்தன் என்றால் படைத்தலைவன் அல்லது தளபதி எனப் பொருள். நாராயணன் என்பது அவனது பெயர். சதுர்வேதிமங்கலம் என்பது அந்தணர்கள் வாழும் பகுதி. தற்போது உள்ள கீழ அலங்கம் கொண்டிராஜபாளையம் பகுதியில் நரசிம்ம பெருமாள் கோயிலைக் கட்டினான். அதற்கு சாமந்த நாராயண விண்ணகரம் (கோயில்) எனப் பெயர் சூட்டினான். மேலும், அக்கோயிலுக்காக அருகில் சாமந்தான் குளம் என்ற நீர்நிலையை உருவாக்கினான். தொடக்கத்தில் சாமந்த நாராயணன் குளம் என அழைக்கப்பட்ட இக்குளம் காலப்போக்கில் நாராயணன் என்ற பெயர் மறைந்து, இப்போது சாமந்தான் குளம் என அழைக்கப்படுகிறது. 

இதையும் படிக்க |  ராஜராஜசோழன் நினைவிடம்: தொடரும் புதிர்!

இக்கோயிலின் கருவறையில் 5 அடி உயரத்தில் யோக பட்டத்தில் அமர்ந்த நிலையில் நரசிம்ம பெருமாள் காட்சி  அளிக்கிறார். இத்திருமேனி கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதால், அதில் பாண்டியர் கலை பாணி காணப்படுகிறது. அதையொட்டி, தெருவை உருவாக்கி குடியிருப்புகளையும் ஏற்படுத்தினான். இப்பகுதி இப்போதும்  உள்ளது. இதுபற்றிய தகவல்கள் பெரியகோயிலில் பெருவுடையார் சன்னதியின் முன் வலதுபுறத்தில் உள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

அதன்பிறகு வந்த நாயக்கர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் இந்நகரம் வளர்ச்சி பெற்றது என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT