தொடர் மழையினால் மோசமான நிலையில் பச்சமலை வனச்சாலை. 
சிறப்புச் செய்திகள்

மழையால் மோசமான பச்சமலை வனச்சாலை! அரசு கவனத்தில்கொள்ளுமா?

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் சோபனபுரம் - டாப் செங்காட்டுப்பட்டி வரையிலான பச்சமலை சாலை, தொடர் மழையினால் மேலும் மோசமானதால் பழங்குடியினரையும், சூழல் ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

என். கணேஷ்சங்கர்

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் சோபனபுரம் - டாப் செங்காட்டுப்பட்டி வரையிலான பச்சமலை சாலை, தொடர் மழையினால் மேலும் மோசமானதால் பழங்குடியினரையும், சூழல் ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

துறையூர், உப்பிலியபுரம் வழியாக சோபனபுரத்திலிருந்து பச்சமலை கிராமமான டாப் செங்காட்டுப்பட்டிக்குச் செல்ல சுமார் 14 கிமீ தொலைவில் தார் சாலை உள்ளது. இந்த சாலை வனத்துறை பராமரிப்பில் உள்ளதால் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதாகவே உள்ளது. இதனை சீரமைத்துத் தருமாறு செப். 9 சோபனபுரத்தில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற சென்ற வனத்துறை அமைச்சர் ராமசந்திரனிடம் பழங்குடியினர் முறையிட்டபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிச் சென்றார். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் இந்த சாலை சீரமைக்கப்படும் என பச்சமலையில் நடைபெற்ற மனு நீதி நிறைவு நாள் விழாவில் கூறினார். 

அரசுப் பேருந்திலுள்ள பயணிகளைக் காக்கும் முயற்சியில் பழங்குடியினர் 

பழங்குடியினர் மட்டுமின்றி பச்சமலை செல்லும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பிலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது. ஆயினும் எந்த நடவடிக்கையும் இல்லாதது பழங்குடியினர், சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சமலை மீது வசிக்கிற பழங்குடியினர் தங்கள் வேளாண்மைக்குத் தேவையான தளவாடப் பொருள்களை உப்பிலியபுரம், துறையூரிலிருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருள்களை உப்பிலியபுரம் துறையூர் வழியாக வாகனங்களில் கீழிறக்கி பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்க வேண்டும். இந்தப் பணிகளின்போது பழங்குடியினர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். 

அரசு அதிகாரிகள் வாகனத்தை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் முயற்சியில் பழங்குடியினர்

பச்சமலையில் உள்ள அருவிகள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சூழல் ஆர்வலர்கள், மலையேற்றத்தில் ஆர்வமுடையவர்கள், பச்சமலை சாலையைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சமலை பழங்குடியினர் மாற்றுப்பாதையாக துறையூர் ஒன்றியம் பச்சமலை பகுதியை சாலையைப் பயன்படுத்தினால் சுமார் 50 கிமீ வரை சுற்றி பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த இரண்டு ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட சாலைகளும் குறுகிய சாலைகள்தான். ஒரு கனரக வாகனம் சென்றால் மற்றொரு கனரக வாகனத்தை ஒதுக்கி நிறுத்துவதே சிரமம்.

பச்சமலை சாலை அரிப்பில் கல் அடுக்கும் பழங்குடியினர்

இந்த நிலையில் நிகழாண்டில் பச்சமலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்வரத்து ஓடைகளில் மட்டுமின்றி சாலையையும் அரித்துக் கொண்டு மழை நீர் சிறு வாய்க்காலாக செல்கிறது. நிலச்சரிவு என்று சொல்லிவிட முடியாது என்றாலும் சிறு சிறு பாறைகள் மண் பிடிமானம் தளர்ந்து ஆங்காங்கே உருண்டு சாலைப் பகுதிகளில் கிடக்கின்றன எனவும், போதிய அகலமற்ற, குறுகிய சாலை, சாலை நடுவில் அரிப்பு ஏற்பட்டிருக்கிற நீண்ட ஆழமான குழி, அதனை மழைநீர் மறைக்கிறபோது செல்லக்கூடிய வாகனங்கள், சாலையில் உள்ள குழியின் ஆழம் தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அச்சம் கொள்கின்றனர்.

இந்த நிலையில் உப்பிலியபுரம் வடக்கு பாஜக தலைவர் லோகநாதன் தனது கட்சியினருடன் வியாழக்கிழமை பச்சமலை சென்றபோது சோபனபுரம் - டாப்செங்காட்டுப்பட்டி சாலையில் 4, 5 வளைவுகளுக்கு இடையே சாலை நடுவில் வாய்க்கால் போன்று சென்ற மழைநீரைப் பார்த்தனர்.

பச்சமலை சாலை அரிப்பில் குழியில் கல் நிரப்பும் பழங்குடியினர் 

விபரீதத்தை உணர்ந்து விபத்தை தவிர்க்க அந்த பகுதியில் ஓரமாகக் கிடந்த கற்கள், சிறு பாறைகள் ஆகியவற்றை பழங்குடியினர் உதவியுடன் எடுத்து சாலையிலிருந்த பெருங்குழியை நிரப்பி சரி செய்தனர்.

இதனால் தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படப் போவதில்லை என்றும், சோபனபுரம் - டாப் செங்காட்டுப்பட்டி பழுதான நிகழாண்டு மழைக்குப் பிறகு மிகவும் மோசமாகியுள்ள சாலையை போர்க்கால நடவடிக்கையாக சீரமைக்க அரசு முன் வரவேண்டுமெனவும் பழங்குடியினர் மற்றும் பச்சமலை சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

SCROLL FOR NEXT