முகப்பு
சிறப்புச் செய்திகள்

மதி​முக இணை​கி​ற‌தா, பிள​வு​ப​டு​கி​ற‌தா?

மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் எஸ்.துரைசாமியின் போர்க்கொடியால் அந்தக் கட்சி பிளவுபடுமா அல்லது திமுகவுடன் இணையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
வைகோ
பகிர்:

மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் எஸ்.துரைசாமியின் போர்க்கொடியால் அந்தக் கட்சி பிளவுபடுமா அல்லது திமுகவுடன் இணையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மதிமுக தலைமை மீது குறிப்பாக, கட்சியின் பொதுச் செயலர் வைகோவின் மகனும் கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை துரைசாமி முன்வைத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடக்கும் சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக மனம் வெதும்பியுள்ளார். அவரது வேதனை கட்சியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே மதிமுகவில் இப்போது பேசப்பட்டு வரும் பிரதான விஷயமாகும்.

1985களின் பிற்பகுதியில் திமுகவில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தலைவராக வைகோ திகழ்ந்தார். இது 1991ஆம் ஆண்டு டிசம்பரில் மதுரையில் நடந்த அந்தக் கட்சியின் பவள விழா மாநாட்டில் எதிரொலித்தது. திமுகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களிலேயே செல்வாக்கு மிக்க தலைவராக வைகோ திகழ்ந்தது, அந்தக் கூட்டத்தில் எதிரொலித்தது. தமுக்கம் மைதானத்துக்குள் நுழைந்த வைகோவுக்கு கட்சித் தொண்டர்கள் மிகப்பெரிய வரவேற்பு 
அளித்தனர்.

இதுபோன்ற வரவேற்புகளால் ஒரு சில ஆண்டுகளுக்குள் வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தமிழக அரசியலைத் தொடர்ந்து கவனிப்போருக்கு அந்தச் செய்திகள் ஒன்றும் புதிதல்ல. விளைவு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை அவர் தொடங்கினார். 

இதற்கு முன்பாக, யார் உண்மையான திமுக என்ற சட்டப் போராட்டத்தையும் அவர் நடத்திப் பார்த்தார். அந்தப் போராட்டம் பலனளிக்காமல் போகவே, 1994ஆம் ஆண்டு மே 6}ஆம் தேதி மதிமுக தொடங்கப்பட்டு அதன் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வெள்ளி முளைத்ததைப் போன்று மதிமுக உருவானது. வைகோவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இருபெரும் திராவிட கட்சிகளில் இருந்து விலகி பலர், குறிப்பாக இளைஞர்கள் சாரை சாரையாக மதிமுகவில் இணைந்தனர். தனது சொந்தப் பகுதியான தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் தழுவிய அளவில் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார் வைகோ.

மாறி மாறி கூட்டணி: கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் மாநிலம் தழுவிய அளவில் கிடைத்த செல்வாக்கும், அவரது பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பும் வைகோவுக்கும் புதுத் தெம்பைத் தந்தது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த உற்சாகம் தேர்தல் முடிவுகளால் சுணங்கிப் போனது. 

1996ஆம் ஆண்டு நடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை, திராவிட கட்சிகள் இல்லாமல் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் துணையுடன் எதிர்கொண்டது, மதிமுக. எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. மார்க்சிஸ்ட் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் வென்றது. திமுக, தமாகா கூட்டணி, அதற்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால், ஆட்சியிலிருந்த அதிமுக அகற்றப்பட்டது என்றால், மதிமுக படுதோல்வியைச் சந்தித்தது.

போட்டியிட்ட ஒரே தேர்தலில் கிடைத்த படுதோல்வி, கட்சியில் தனது செல்வாக்கைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியன திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி என்ற நிலைக்கு வைகோவை தள்ளியது. எந்தக் கட்சியில் தனக்கு முரண் ஏற்பட்டு வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணியிலேயே இணைய வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. 1998ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளையும், 1999இல் திமுக இடம்பெற்றிருந்த கூட்டணியில் 4 தொகுதிகளையும் மதிமுக கைப்பற்றியது.
திமுக, அதிமுக கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்று மக்களவைத் தொகுதிகளை வென்ற வைகோவுக்கு தனித்துப் போட்டி என்ற எண்ணம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக தனித்துக் களம் இறங்கியது. ஆனால், 1996ஆம் ஆண்டின் தேர்தல் முடிவே மதிமுகவுக்கு கிடைத்தது. தேர்தல் என்றால் இனி கூட்டணிதான், இல்லாவிட்டால் தேர்தலே வேண்டாம் என்ற சூழலுக்கு மதிமுக சென்றது. 2004 மக்களவைத் தேர்தலிலும், 2006 பேரவைத் தேர்தலிலும் திமுககாங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று ஒற்றை இலக்கத்திலேயே வெற்றி வாய்ப்பைப் பெற்றது.

2009 மக்களவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்த மதிமுக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில்  விரும்பிய தொகுதிகளை அதிமுக தலைமை வழங்காததால், தேர்தலை புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். 
தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக என கூட்டணிக் கணக்குகள் மாறிய நிலையில், பிரதான திராவிட கட்சிகள் இடம்பெறாத கூட்டணியில் மதிமுக இடம்பெற்றது; பாஜக, பாமக இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் அந்தக் கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. அப்போதிருந்தே கட்சிக்குள் லேசான முணுமுணுப்புகள் எழத் தொடங்கின.

கட்சி தொடங்கிய காலத்தில் கூட்டணியைக் கட்டமைத்தது போன்று, 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி என்ற அணியை கட்டமைக்கும் காரணிகளில் ஒருவராக வைகோ இருந்தார். இதை மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஏற்காவிட்டாலும் வைகோவுக்காக அரைகுறையாகச் சம்மதித்தனர். தேர்தல் முடிவுகள் மதிமுக நிர்வாகிகளை வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்க வைத்தது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, மீண்டும் திராவிட கட்சியுடன் கூட்டணி என்ற நிலைக்கு மதிமுக சென்றது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்தக் கட்சியின் சின்னமான உதயசூரியனிலேயே மதிமுக போட்டியிட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேசமூர்த்தி வென்றார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்தக் கட்சியின் சின்னத்தில் ஆறு இடங்களில் போட்டியிட்ட மதிமுக, நான்கு இடங்களில் வென்றது.

அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட முடியாத சூழல் ஒருபுறமிருக்க, வைகோவின் மகன் துரை வைகோவுக்கு அளிக்கப்பட்ட கட்சிப் பதவி, நிர்வாகிகளின் ஒரு பகுதியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது இலைமறை காயாக வெளிப்பட்ட நிலையில், இப்போது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

துரையை எதிர்க்கும் துரைசாமி: 1957ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்  திருப்பூர் எஸ்.துரைசாமி. இப்போது மதிமுகவின் அவைத் தலைவராக உள்ளார். கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு அவர் எழுதிய கடிதம் புயலைக் கிளப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவுக்குள் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். "எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு  எத்தனை இடங்களை திமுக ஒதுக்கும் என்பதே தெரியாத நிலையில், விருதுநகரில் துரை வைகோ போட்டியிடுவார் எனத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. எந்த அரசியல் கட்சியும் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் குடும்ப மறுமலர்ச்சிக்குத்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக தங்களது உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் பலர் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைப்பதே சாலச் சிறந்தது' எனக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த நோக்கத்துக்காக மதிமுக எனும் கட்சியை வைகோ தொடங்கினாரோ அந்த நோக்கத்தையே கேள்விக்குறியாக்கி, திருப்பூர் எஸ்.துரைசாமி எழுதியுள்ள கடிதம் அந்தக் கட்சி எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் எதையும் தெரிவிக்காத மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்; அவர் குறித்து ஜூன் மாதம் நடைபெறும் கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு மாற்று என்ற முழக்கத்துடன் கடந்த 1994ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி தொடங்கப்பட்ட மதிமுக, 30 ஆண்டுகளை நெருங்கவுள்ளது. அரை நூற்றாண்டைக் கடந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பற்றவைத்த நெருப்பு, மதிமுக எனும் கால் நூற்றாண்டைக் கடந்த கட்சியைப் பிளக்குமா அல்லது தாய் கட்சியான திமுகவுடன் இணைக்குமா என்பதற்கான விடை வெகு விரைவில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.