2024 தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் - சுவாமி விவேகாநந்தர் தியானம் செய்த கன்னியாகுமரி விவேகாநந்தர் நினைவுப் பாறைக்கு - பிரதமர் நரேந்திர மோடியும் தியானம் செய்ய வருகிறார், இந்த முறை மூன்று நாள்கள் தியானம் செய்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 30 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வரும் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்குக் கன்னியாகுமரி வந்து இறங்குகிறார். மாலை 6.30 மணிவாக்கில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்.
ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுத் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாலை 4.10 மணிக்கு விமானப் படை விமானத்தில் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
மோடியின் வருகையையொட்டி, இந்த நாள்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து விடுதிகளிலும் பொதுமக்கள் தங்குவதற்குக் கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாள்களும் விவேகானந்தர் பாறையிலுள்ள மையத்திலேயே பிரதமர் மோடி தங்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தங்கியிருக்கக் கூடிய பகுதியைத் தவிர்த்து பிற பகுதிகளுக்கு ஆதார் அடையாள அட்டையுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 2019 - மக்களவைத் தேர்தலின்போதும் பிரசாரம் எல்லாம் முடிந்ததும் தில்லியில் அமித் ஷாவின் நேர்காணலின்போது உடனிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மறுநாள், 2019 மே 18, இமயமலையிலுள்ள கேதார்நாத் கோவிலுக்குச் சென்றதுடன் அருகில் ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.
கேதார்நாத் கோவில் அருகே புதிதாக உருவாக்கப்பட்ட தியான குகை எனக் குறிப்பிடப்பட்ட இந்த இடத்திற்கு பிற்பகல் 2 மணிவாக்கில் சென்று, இரவும் அங்கேயே தங்கிய அவர் எவ்வளவு நேரம் தியானம் செய்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
“இரவு உணவு குகைக்கே அனுப்பிவைக்கப்பட்டது. குகையில் மின்வசதி செய்யப்பட்டிருந்ததுடன், ஹீட்டர், எளிய படுக்கை, விரிப்புகள், இணைந்த கழிப்பறை, சிறிய குளிக்குமிடம், சுடுதண்ணீருக்கான சாதனம் ஆகியவையும் இருந்தன. தொலைபேசி வசதியும் இருந்தது. தவிர, குகையிலிருந்து 30 மீட்டர், 100 மீட்டர் தொலைவுகளில் பாதுகாப்புக்காகக் கூடாரங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன” என்று அப்போது ருத்ரபிரயாகை மாவட்ட ஆட்சியர் மங்கேஷ் கில்டியால் தெரிவித்தார்.
இமயமலையில் வெளியிலும் குகையிலும் மோடி அமர்ந்திருக்கும், தியானம் செய்யும் புகைப்படங்கள் அப்போது சமூக ஊடகங்களில் வைராகிப் பரவின. அதேபோல இப்போதும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்யவுள்ள படங்களும் காட்சிகளும் விறுவிறுப்பாகப் பரவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது (இதேபோல, 2014 மக்களவைத் தேர்தலின்போதும் பிரசாரம் முடிந்ததும் பிரதாப்கர்கிற்கு ஓய்வெடுக்கச் சென்றார்).
இமயமலையிலிருந்து குமரி முனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.