சிந்து உடன்பாட்டில் கையெழுத்திடும் நேரு, அயூப் கான்... தினமணி கருவூலத்திலிருந்து...
சிறப்புச் செய்திகள்

கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!

தற்போது இந்தியா நிறுத்திவைத்துள்ள சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாடு கையெழுத்தான நாளில் நடந்தவற்றைப் பற்றி...

எம். பாண்டியராஜன்

பாகிஸ்தானுக்குத் தற்போது இக்கட்டானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய அரசு நிறுத்திவைத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிந்து நதி நீர் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும்.

இந்த உடன்பாடு ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் நடந்த விழாவில்  கையெழுத்திடப்பட்டது.

அதிபர் மாளிகைத் திடலில் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலில் நடந்த இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக  அழைக்கப்பட்டிருந்தனர். உடன்பாட்டில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டபோது, ஒட்டுமொத்த திடலும் விண்ணதிர பெரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றது. உடன்பாடு கையெழுத்திடும் முன்னரும் பின்னரும் ராணுவத்தினர் இரு நாடுகளின் தேசிய கீதங்களை இசைத்தனர்.

உடன்பாடு கையெழுத்திடுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னர் விழாப் பந்தலுக்கு ஜவாஹர்லால் நேருவும் அயூப் கானும் சேர்ந்தாற்போல வந்தனர். அவர்களுடன் உலக வங்கியின் துணைத் தலைவராக இருந்த இலிப் என்பவரும் வந்தார்.

இரு நாடுகளும் இந்த உடன்பாட்டை எட்டுவதில் பெரும் உதவி செய்த உலக வங்கி சார்பில் இலிப்பும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

இந்தியாவின் சார்பில் பாசனத் துறை அமைச்சர் ஹபீஸ் முகமது இப்ராஹிம், இணை அமைச்சர் ஜெய் சுக்லால் ஹாத்தி, பாகிஸ்தான் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மன்சூர் காதிர், நிதித் துறை அமைச்சர் ஷாயிப், வெளியுறவுச் செயலர் இக்ரமுல்லா போன்றோர் கலந்துகொண்டனர்.

மேலும், பிரிட்டன் நாடாளுமன்ற துணைச் செயலர் தாம்சன், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்களும் வந்திருந்தனர்.

சிந்து நதி தீரத்திலுள்ள அனைத்து நதிகளின் நீரைத் திருப்திகரமாகப் பகிர்ந்து கொள்வது பற்றி உடன்படுவதுடன், இவ்விஷயத்தில் இரு நாடுகளின் பொறுப்புகளையும் உரிமைகளையும்கூட உடன்பாடு வரையறுத்தது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த நதி நீர்த் தகராறு முடிவுக்கு வந்ததாக அப்போது இரு தரப்பும் கொண்டாடியது; உலகின் பல்வேறு நாடுகளும்கூட வாழ்த்தின; வரவேற்றன.

அமெரிக்க தலைவர்கள் பாராட்டு

இந்த உடன்பாடு எட்டப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருந்தது.

சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாட்டை எட்டியதற்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை – நேருவையும் அயூப் கானையும் - பாராட்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பணம் செலுத்தி நியூயார்க் டைம்ஸில் விளம்பரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த விளம்பரத்தில் கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் இரு கட்சிகளின் முக்கிய செனட்டர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

விளம்பரத்தில், ‘தங்கள் மக்களின் பொது நலனுக்காக சிந்து நதி தீர தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டு தீர்க்க தரிசனத்துடன் நடந்துகொண்டும், எவ்வளவு சிக்கலான சர்வதேச பிரச்சினையாக இருப்பினும் பொறுமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு காண்பது சாத்தியமே என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியதற்காகவும் இந்தியப் பிரதமர் நேருவையும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானையும் பாராட்டி வணங்குகிறோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய உறவின் அடையாளம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையில் உருவாகிவரும் புதிய உறவின்  அடையாளம்தான் தன்னுடைய வருகையும் சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாடும் என்று கராச்சி நகர்மன்றம் அளித்த வரவேற்பில் பேசிய பிரதமர் நேரு குறிப்பிட்டார்.

மிகுந்த தொலைநோக்குடனும் நல்லெண்ணத்துடனுமான நேருவுடைய அப்போதைய பேச்சின் ஒரு பகுதி:

“கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று விரும்புவதுடன் மட்டுமின்றி, எல்லைக்கு இருபுறமும் உள்ளவர்களிடையே புதிய உறவு முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம். எனவே, நான் இங்கே வந்திருப்பது இந்த அடிப்படை உண்மையின் அடையாளம்தான்.

“பல்வேறு வாழ்க்கை முறையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள நெருக்கமான தொடர்பை வேறெந்த இரு நாடுகளுக்குமிடையே காண முடியாது. இரு நாடுகளுக்குமிடையில் இருந்துவந்த புராதன உறவு முறை மீண்டும் நெருக்கமடைந்து நட்புறவு நிலவுமென நம்புகிறேன்.

“இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பது ஒருபுறமிருக்கட்டும். புவியியல் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் என்பதும் ஒருபுறமிருக்கட்டும். இரு சாராருக்கும் இடையில் என்னதான் தகராறு இருந்தபோதிலும் அவற்றுக்கிடையிலுள்ள உறவு முறையை அகற்றிவிட முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இரு சகோதரர்கள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடும். பழிச் சண்டைகூட போட்டுக்கொள்ளலாம். ஆனால், அவர்களின் சகோதர பாசத்தை அகற்றிவிட முடியாது.

“இந்த உடன்பாடு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இதுவொரு நீண்ட காலத் தகராறுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. இரு தரப்பிலுமுள்ள மக்களுக்கு – இவர்களின் பெரும்பாலோர் விவசாயிகள் – இந்த உடன்பாடு நன்மையைக் கொண்டுவருவதால் இதுவொரு முக்கியமான ஆவணமாகும். நமக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாலும் இந்த உடன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.”

லட்சம் பேர் திரண்ட வரவேற்பு!

கராச்சியில் பிரதமர் நேருவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நேரு ஜிந்தாபாத் என்று முழங்கியபடி, லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர்.

கராச்சி விமான நிலையத்திலிருந்து அதிபர் மாளிகைக்குச் செல்லும் 10 மைல் தொலைவு பாதை நெடுகிலும் சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் திரள் கூடிநின்றது. கராச்சி விமான நிலையத்துக்கே வந்து நேருவை வரவேற்று ஒரே காரில் அதிபர் அயூப் கான் அழைத்துச் சென்றார். இருவரும் அதிபர் மாளிகைக்கு வந்து சேருவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் முன்னதாகவே அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்தனர்.

மிகுந்த தொலைநோக்குடன் இரு நாட்டுத் தலைவர்களுமாகப் பேசிப் பேசி மிகுந்த அக்கறையுடன் மிகவும் கோலாகலமாகச் செய்துகொள்ளப்பட்டது இந்த உடன்பாடு.

இந்த உடன்பாட்டுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் எத்தனையோ போர்கள், மோதல்கள் நேர்ந்தபோதிலும் உடன்பாடு நிறுத்திவைக்கப்பட்டதில்லை. 65 ஆண்டுகளாகப் பாதிப்பின்றித் தொடர்ந்தது.

ஆனால், தற்போது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு கொள்கை முடிவெடுத்து நிறுத்திவைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும். இதன் தொடர் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்று இப்போது உறுதியாக எதுவும் கூறவியலாது.

இதையும் படிக்க: சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம்... பாகிஸ்தானை எதிர்க்கும் ஆயுதமாவது எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

வெவ்வேறு நட்சத்திரங்களில் நின்ற "சனி" தரும் பலன்கள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT