சஞ்சாா் சாத்தி செயலி 
சிறப்புச் செய்திகள்

வில்லங்கமானதா சஞ்சாா் சாத்தி செயலி? முழு விவரம்...!

சஞ்சாா் சாத்தி செயலியின் நிறை, குறை பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

‘சஞ்சாா் சாத்தி’ செயலியைப் புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் முன்பே நிறுவி (இன்பில்ட்) இருக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குடிமக்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், மக்களை உளவு பார்க்க அரசின் முயற்சி என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பிய நிலையில், இந்த செயலி கட்டாயம் இல்லை, வேண்டுமென்றால் பயனர்கள் நீக்கிக் கொள்ளலாம் (டெலிட்) என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

‘சஞ்சாா் சாத்தி’ செயலி என்றால் என்ன?

திருடு போகும் செல்போன்களை கண்டறிவதற்கும், ஆன்லைன் மோசடி புகார் அளிப்பதற்கும் உதவும் வகையில், கடந்த ஜனவரி மாதம் ‘சஞ்சாா் சாத்தி’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

  • இந்த செயலி மூலம், செல்போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், அதை பதிவு செய்து அனைத்து தளங்களிலும் முடக்கலாம்.

  • மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும் எண்களை இந்த செயலி மூலம் ’ரிபோர்ட் ஸ்பேம்’ செய்து புகார் அளிக்க முடியும்.

  • குறிப்பிட்ட பயனரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளது, எத்தனை பயனில் உள்ளது என்பதை அறிய முடியும்.

  • செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை சரிபார்க்க முடியும்.

கடந்த 11 மாதங்களில் மட்டும் சஞ்சாா் சாத்தி செயலி உதவியுடன் தொலைந்து போன 7 லட்சத்துக்கும் அதிகமான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 42 லட்சம் பேர் இந்த செயலியைப் பயன்படுத்தி தொலைந்த செல்போன்களை அனைத்து தளங்களில் இருந்து துண்டித்துள்ளனர்.

‘சஞ்சாா் சாத்தி’ கட்டாயம்

இந்தியாவில் விற்பனை செய்வதற்காக புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்பே இன்பில்ட்டாக (Inbuilt) நிறுவி இருக்க வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த நவ. 28 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய கைப்பேசிகளிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கைப்பேசிகளின் பயன்பாட்டின்போது இந்தச் செயலி எளிதில் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்; செயலியின் செயல்பாடுகளை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது என்று உத்தரவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தனியுரிமை கவலை

இந்த செயலியால் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்படுவதாகவும், மக்களை உளவு பார்ப்பதற்காக மத்திய அரசின் திட்டம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செல்போன்களில் இருந்து நீக்க முடியாத வகையில் இன்பில்ட் செய்யப்படும் இந்த செயலியால், மக்களிடம் இருந்து எந்தெந்த தகவல்களை அரசு சேகரிக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்தம் 120 கோடி மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ‘சஞ்சாா் சாத்தி’ செயலி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

”சஞ்சாா் சாத்தி செயலியை பயனர்கள் விரும்பினால் மட்டுமே அதனை செயல்படுத்தலாம் (ஆக்டிவேட்), இல்லையென்றால் செயல்படுத்தாமல் விட்டுவிடலாம். சஞ்சாா் சாத்தி செயலி வேண்டாம் என்றால் அதனை செல்போனில் இருந்து நீக்கி (டெலிட்) விடலாம். இது கட்டாயம் கிடையாது. மக்களின் விருப்பமே.” என்று கூறியுள்ளார்.

எதிர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்கை விதியின்படி, எந்த மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது அரசின் செயலிகளை இன்பில்ட்டாக நிறுவாது.

அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் இந்த உத்தரவை ஏற்க மறுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் ஆப்பிள் நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், தென் கொரிய நிறுவனமான சாம்சங், சீன நிறுவனங்களான ஓப்போ, விவோ, ஷாவ்மி உள்ளிட்ட நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே, இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து செல்போன் நிறுவனங்களும் அடுத்த 90 நாள்களுக்குள் தங்களின் செல்போன்களில் சஞ்சாா் சாத்தி செயலியை நிறுவி, 120 நாள்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

What is Sanchar Saathi app? Full details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்! மேல்முறையீடு செய்ய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்ற வங்கதேசம்!

டிட்வா புயலால் இலங்கையில் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!

SCROLL FOR NEXT