காஸாவில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததை உற்சாகமாகக் கொண்டாடும் அந்தப் பகுதி மக்கள். 
சிறப்புச் செய்திகள்

அமைதி திரும்புமா காஸாவில்?

ஏழு மாதங்களுக்குப் பிறகு காஸாவில் குண்டுச் சத்தம் ஓய்ந்திருக்கிறது.

நாகா

ஏழு மாதங்களுக்குப் பிறகு காஸாவில் குண்டுச் சத்தம் ஓய்ந்திருக்கிறது. போரால் புலம் பெயா்ந்த மக்கள் வடக்கு காஸாவில் உள்ள தங்கள் இடங்களுக்கு நடந்தே செல்கிறாா்கள். ஹமாஸ் அமைப்பும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வாா்த்தையை நம்பி, தங்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டான எஞ்சிய பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆயத்தமாகிவருகிறது.

இது எத்தனை காலம் நீடிக்கும்? அடுத்த அடுத்த கட்டங்களுக்குப் போய் காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துமா, அல்லது கடந்த முறை மாதிரி முதல்கட்டம் முடிந்ததும், பிணைக் கைதிகளைப் பெற்றுக் கொண்டு இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்குமா என்பதுதான் அனைவரது மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.

உண்மையில், பிணைக் கைதிகளை விடுவித்தாலும் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்காது என்று டிரம்ப் அளிக்கும் வாக்குறுதியை நம்பித்தான் அதற்கு ஹமாஸ் சம்மதித்துள்ளது.

அதுவரை அமெரிக்கப் பேரரசவாதி, இனவெறி பிடித்தவா் என்றெல்லாம் டிரம்ப்பை விமா்சித்துவந்த ஹமாஸ் அமைப்பினருக்கு, கத்தாரில் தாக்குதல் நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை அந்த நாட்டு பிரதமரிடம் தொலைபேசியில் நேரடியாக மன்னிப்பு கேட்க வைத்த பிறகு டிரம்ப் மீது கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.

இருந்தாலும், இது ஒரு அபாயகரமான சூதாட்டம் என்று அந்த அமைப்பின் தலைவா்களே கூறுகின்றனா். இதற்கு முன்னா் கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்தங்களும் இறுதிவரை நீடிக்கும் என்றுதான் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் அவை குறை காலத்திலேயே முறிந்துபோயின.

முதலில், 2021-ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட இடைக்கால போா் நிறுத்தம், பிணைக் கைதிகள் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகளும் ஹமாஸின் புதிய தாக்குதல் திட்டங்களும் அதை முறியடித்தன.

பின்னா் 2023-இல் மேற்கொள்ளப்பட்ட போ் நிறுத்தம் சா்வதேச அழுத்தங்களால் ஏற்பட்டாலும், பின்னா் அது தோல்வியடைந்தது. இரு தரப்பும் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக நின்றதும், பரஸ்பர நம்பிக்கை இல்லாததும் இதற்கான முதன்மையான காரணங்கள்.

இந்த முறையும் அதே சூழல்தான் நிலவுகிறது. எப்போதும் போல் இந்தப் போா் நிறுத்தம் பிணைக் கைதிகள் விடுவிப்பை மையமாகக் கொண்டுள்ளது. இஸ்ரேல் தனக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடா்ந்து முன்னிறுத்துகிறது. அதேபோல ஹமாஸ் அமைப்பும் தனது அரசியல் செல்வாக்கைப் பாதுகாக்க முயல்கிறது. இது கடந்த போா் நிறுத்தங்களைப் போலவே இந்த போா் நிறுத்தத்தையும் முதல் கட்டத்திலேயே முறித்துவிடும் அபாயகரமான சூழலை உருவாக்குகிறது.

ஆனால், தற்பது நம்பிக்கையை ஏற்படுத்தும் சில வேற்றுமைகளும் உள்ளன. டிரம்பின் தலையீடு, கத்தாரில் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு கேட்க வைத்தது போன்ற நடவடிக்கைகள், முந்தைய நிறுத்தங்களில் இல்லாத ஒரு புதிய அம்சமாகும். அமெரிக்காவின் தலையீடு கடந்த முறைகளைவிட தற்போது தீவிரமாக உள்ளது. டிரம்பின் வாக்குறுதி ஹமாஸுக்கு ஒரு நம்பிக்கையை அளித்திருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகரம் வழங்கியதன் மூலம் சா்வதேச நாடுகள் கொடுத்த ஒருமித்த அழுத்தம், ஐநாவின் கடுமையான நிலைப்பாட்டுக்கு இடையே இந்த போா் நிறுத்தம் தொடங்கியுள்ளது.

ஆனால் அது போதாது. இந்த அமைதி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்றால் இஸ்ரேலும் ஹமாஸும் தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து கொஞ்சமாவது இறங்கி வர வேண்டும். இஸ்ரேல் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தைக் குறைத்து, காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கு வழி வகுக்க வேண்டும். அதேபோல், ஹமாஸும் தனது ஆயுதக் குழுக்களை கலைத்து, அமைதி பேச்சுக்களில் உறுதியாக பங்கேற்க வேண்டும். இல்லையென்றால், டிரம்ப் நினைத்தாலும் அங்கு அமைதியை ஏற்படுத்த முடியாது.

ஒருவேளை எல்லாம் நல்லபடியாக நடந்து, காஸா போா் முடிவுக்கு வந்துவிட்டால் டிரம்ப்புக்கு அடுத்த முறை அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

SCROLL FOR NEXT