தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், அதற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
சீனா தங்கம் வாங்கிக் குவிக்கிறது, பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை உயர்த்தி வருவது தங்கம் விலை உயர்வுக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், வெள்ளி விலை இவ்வாறு கிடுகிடுவென உயர்கிறது என்றால் அதற்கும் சில காரணங்கள் இருக்கத்தானே வேண்டும்.
ஒரு மெட்டி வாங்க வேண்டும் என்றால் ரூ.5000 ஆகும், கொலுசு வாங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் ஆகும் என கவலைகொள்ளும் மக்கள், வெள்ளியைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
உலகளவில் வெள்ளி கிடைக்கும் அளவு - தேவைக்கு இடையே இருக்கும் வேறுபாடுதான், தற்போது வெள்ளி விலை உயர்வுக்கான காரணமாகக் கூறப்படுகிறது. பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின்னழுத்தம், மின்னணு வாகனங்கள் உற்பத்தி, மின்துறை, 5ஜி உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி போன்றவை இணைந்து வெள்ளியின் தேவையை அதிகரித்து, சர்வதேச அளவில் விலை உயர்வுக்கு வழிகோலுகின்றன.
இவற்றுக்கு இணையாக, சவூதி அரேபிய மத்திய வங்கி, தங்கத்துக்கு மாற்றாக, வெள்ளியை வாங்கி, வெள்ளி கையிருப்பை உயர்த்தி வருகிறது. சவூதி அரேபியா போலவே, உலகளவில், வெள்ளி உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தின் பலனை பயன்படுத்த பல உலக நாடுகளும் வெள்ளியை கையிருப்பில் வைத்திருக்க முனைகின்றன.
சர்வதேச காரணங்களால், பங்குச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மை, உலோக முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்ப்பதும், வெள்ளியின் விலையை உறுதியாக்கி வருகிறது.
இவற்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளி தொடர்ச்சியாக பத்து வாரங்கள் லாபத்தைக் கண்டு வருகிறது. தொடர்ந்து வெள்ளி விலை உயர்ந்தும் வருகிறது. இருப்பினும் இந்த விலை உயர்வு குறுகிய கால நிகழ்வாகவே இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
முதலீட்டாளர்களுக்கு..
நடுத்தர மற்றும் நீண்டகால முதலீடுகளுக்கு எப்போதும் வெள்ளி நல்ல வாய்ப்பாகவே இருந்து வருகிறது. குறுகிய கால கண்ணோட்டத்துடன் இல்லாமல், நீண்ட கால லாபத்தை நாடும் முதலீட்டாளர்கள், வெள்ளி முதலீட்டிலிருந்து பின்வாங்கத் தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.
பல நூற்றாண்டு காலமாகவே வெள்ளி நகைகள், பொருள்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. அது மட்டுமல்லாமல், வெள்ளி மற்றும் தங்க நாணயப் பயன்பாடுகளும் வெள்ளியின் மதிப்பை உயர்த்தியே பிடித்திருக்கின்றன.
ஒரு கிராம் விலையிலேயே பெரிய அளவில் வேறுபாடு காணப்பட்டாலும், தங்கம், பிளாட்டினத்துடன் வெள்ளிதான் விலைமதிப்புள்ள உலோகமாக அடையாளம் காணப்படுகிறது. உலகளவில் அதன் பற்றாக்குறை, நிறம், மற்றவற்றுடன் இணக்கத்தன்மை, நீர்த்துப்போகும் திறன், ஆக்சிஜனேற்றத்துக்கு எதிரான திறன் ஆகியவைதான், ஆபரணங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளில் வெள்ளியின் பயன்பாட்டை நிலைத்திருக்க வைத்திருக்கின்றன.
வெள்ளி வெறும் ஆபரண உலோகமல்ல!
வெள்ளி வெறும் ஆபரணம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. இயந்திரங்கள், செல்போன் அவ்வளவு ஏன் மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரே உலோகம் விலை உயர்ந்த ஆபரணங்கள் தயாரிக்கவும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதில் வெள்ளிக்கு முதல் இடம்.
சூரியன் மூலம் மின் சக்தி தயாரிக்கும் சூரிய ஒளி தகடுகளுக்கு வெள்ளி அவசியம். ஒவ்வொரு சோலார் தகடுகளுக்கும் 15 - 20 கிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது.
உலகம் முழுவதும் நாள்தோறும் பல லட்சக்கணக்கான சூரிய ஒளி தகடுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதிக சூரிய சக்தி உற்பதி செய்யப்படும்போது, அதிக வெள்ளியும் பயன்படுத்தப்படுகிறது.
மின் வாகனங்களில்
மின்சாரத்தில் இயங்கும் கார்களில் வெள்ளி இருக்கிறது. ஒவ்வொரு மின்கார கார்களிலும் 25 - 50 கிராம் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இது சாதார கார்களை விட 3 மடங்கு வெள்ளிப் பயன்பாடு அதிகம்.
மின் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வெள்ளியின் தேவையை அதிகரிக்கிறது.
5ஜி மற்றும் சிப்களில்
மின்சாரத்தைக் கடத்துவதில் சிறந்த உலோகமாக இருக்கிறது வெள்ளி. எனவே, சிப், செல்போன்கள், 5ஜி டவர்களில் வெள்ளி இடம்பெறுகிறது. வேறு ஒரு உலோகத்தால், இவ்விடங்களின் வெள்ளியின் பயன்பாட்டை மாற்றவே முடியாது.
கிருமிகளின் நாசினி
கிருமிகளைக் கொல்லும் வெள்ளி, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனை கருவிகள், மருந்துகள், சிகிச்சை அளிக்கும் கருவிகளில் வெள்ளி இருக்கிறது. பல காலமாக மருத்துவத் துறை வெள்ளியை நம்பியிருக்கிறது.
ரோபோக்களுக்குத் தேவை
செய்யறிவால் உருவாக்கப்படும் ரோபோட்டுகள் இயங்கத் தேவையான சிப்களில் வெள்ளி இருக்கிறது.
எனவே, வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்தப் பயன்பாடுகளிலிருந்து தொழிற்சாலைகள் வெள்ளியை இப்போதைக்கு மாற்ற முடியாது. எனவே வெள்ளியின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும், வெள்ளி விலை உயர்வுக்குக் காரணங்களாகியிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
இந்தப் பயன்பாடுகளில் வெள்ளிக்கு மாற்றுகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருக்கிறது. மாற்று கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் வெள்ளியின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க... சீனா தங்கம் வாங்கிக் குவிப்பது ஏன்? விரிவான பார்வை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.