பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு மு.க.ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறவில்லையே என்று ஏங்கிய எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும், நாட்டிற்கும் மகத்தான சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான வருண்சிங்பாடி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். இந்திய வீரர்கள் இருவர், ஒரே பிரிவில், இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய திருநாட்டிற்கு பாராலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் புதிய இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
பதக்கம் பெற்ற வீரர்களை பாராட்டும் இந்த நேரத்தில் அவர்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை பாராட்டி ஊக்கம் அளித்தது போல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விருதுகளும் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்புமணி (பாமக): பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் இந்தியாவுக்கு மாரியப்பன் முதல் தங்கத்தை வென்றுள்ளார்.
இளம் வயதில் பள்ளிக்கு செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி வலது கால் நசுங்கி மாற்றுத் திறனாளி ஆனவர். ஆனாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் தீவிரப் பயிற்சி பெற்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்திருக்கிறார்.
இதேபோல் அதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற மற்றொரு இந்திய வீரர் வருண்சிங்பாடிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஒரே பிரிவில் மாற்றுத் திறனாளிகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய பெருமை சேர்த்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.