“இந்தப் பகுதி
இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்
முக்கியமானதை மட்டும்
எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”
இதைக் கேட்டபோது
அவர்கள் முழங்கால் அளவு
தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்
இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்து என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்
முதலில் கைககளில்
எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ
அதையெல்லாம் கைவிட்டார்கள்
பிறகும் கைவிடுவதற்கு
ஏராளமாக இருந்தன
பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்
அழகு சாதனப்பொருள்கள்
கைவிடுவதற்கு முடிவேயில்லாமல்
ஏராளமாக இருந்தன
நீங்கள் கைவிடும்போது
உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல
உறையச் செய்ய வேண்டும்
எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ
அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்
ஒரு தூக்கிலிடுபவனைப்போல
உங்கள் கண்கள் மரத்துப்போக வேண்டும்
ஒரு பாலிதீன் பை அளவுக்கு மட்டுமே
எதையும் எடுத்துக்கொள்ள
அவர்களுக்கு
அவகாசம் இருந்தது
அனுமதி இருந்தது
அவர்கள் ஒரு பிரம்மாண்டமான
விற்பனையகத்தின் முன்னால்கூட
அப்படி திகைத்து நின்றதில்லை
தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது
அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது
எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல
என்று தோன்றிய கணத்தில்
அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது
கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்
வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக்கொண்டார்கள்
சான்றிதழ்ககளை எடுத்துக்கொண்டார்கள்
ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டர்கள்
ரேஷன் கார்டுகளை,
வாக்காளர் அட்டைகளை,
ஆதார் அட்டைகளை,
வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை
கடன் பத்திரங்களை
இன்னும் என்னென்னவோ
முத்திரையிடப்பட்ட காகிதங்களை
ஆவணங்களைத் தவிர
நாம் வாழ்வை மீட்டும் நீட்டிக்கச் செய்வதற்கு
வேறு எதுவுமே முக்கியமல்ல
என்பது அவர்களை ஒரு கணம்
அதிர்ச்சியடைய வைத்தது
பிறகு வீடுகளை அப்படியே
திறந்துபோட்டுவிட்டு
ஒரு பாலீதின் கவரை
தலைக்கு மேலாக தூக்கிப்பிடித்தபடி
மேட்டு நிலம் நோக்கி
தண்ணீரில் வேகவேகமாக நடந்து சென்றார்கள்
- மனுஷ்ய புத்திரன்
(கேரளத்திற்கு..........ஊழியின் தினங்கள்-45)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.