அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டுகோள்
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்குள் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் இணைக்க வேண்டும்...
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்குள் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளிகள்) ஆசிரியர் அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பு அனுமதி உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசை வலியுறுத்தி மாநிலந் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகர்களில் வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான தென் மண்டல முன் தயாரிப்புக் கூட்டம், மாநிலத் தலைவர் அ. அமலராஜன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் விளக்கி சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கனகராஜ் பேசினார். மாநில செய்தித் தொடர்பாளர் பிரேம் தாஸ் நன்றி கூறினார் .
மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டு ஆணையில் அரசு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் என வரிசையாகக் குறிப்பிடப்பட்டு, கற்பித்தல் பணி முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுகின்ற ஏழை எளிய விளிம்பு நிலை மாணவர்கள் பயில்கின்ற அரசு உதவிபெறும் பள்ளிகள் குறித்து குறிப்பிடப்படாதது பல்வேறு விவாதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உடனடியாக அரசாணையில் உரிய திருத்தம்செய்து அரசு உதவிபெறும் பள்ளிகளையும் இணைத்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்விட ஒதுக்கீட்டை நிபுணர் குழு பரிந்துரைத்த 10%-க்கு அதிகரிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் பயில்கின்ற அனைத்து மாணவர்களையும் இவ்விட ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அண்ணா காலந்தொட்டு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை அண்ணாவின் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழக அரசால் நிறுத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் நியமன அலுவலரான தாளாளர் /செயலாளர் முன் அனுமதியுடன் உயர் கல்வி பயின்ற அனைவருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு ஏற்ப உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணை பிரிவினை அனுமதிக்கும் அரசாணையை எவ்வித நிபந்தனைகளுமின்றி நடைமுறைப்படுத்தி அரசு பள்ளி மாணவர்கள் போன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் இலவச ஆங்கிலவழிக் கல்வி பயிலும் வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் பணியில் சேரும் வயது உச்சவரம்பு 57 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையினை மாற்றி பொதுப் பிரிவினருக்கு வயது 40, எனவும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 எனவும் நிர்ணயம் செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு பழைய நிலையே தொடர வழிசெய்ய வேண்டும்.
மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள நிரப்பத்தக்க அனைத்து பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.