தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி: யாருக்கு வாய்ப்பு?

DIN

மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட உள்ளது என்பதை அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

தமிழ்நாடு பாஜக தலைவராக பணியாற்றி வந்த எல்.முருகனுக்கு புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கட்சிவிதிப்படி அரசு பதவி பெறும் ஒருவர் கட்சிப் பொறுப்புகளில் அங்கம் வகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு புதிய நபர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் பாஜகவில் செல்வாக்கு செலுத்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் இந்தப் போட்டியில் முன்னணியில் உள்ளனர். மேலும் இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த அண்ணாமலை பெயரும் இந்த பட்டியலில் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தற்போது பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் பொறுப்பு வகித்துவரும் நிலையில் நயினார் நாகேந்திரனும், அண்ணாமலையும் பாஜக தலைவர் பதவிக்கான இறுதிப்போட்டியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ள நிலையில் இதே அரசியல் வியூகத்தை தமிழ்நாட்டிலும் பாஜக மேற்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர்சாதியினருக்கான கட்சி என எதிர்க்கட்சியினர் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு பாஜக தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருவது அக்கட்சிக்கு பலன் கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக தலைவராக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியவர்களில் யாரேனும் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டால் அது மேலும் அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என அக்கட்சியினர் கருதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கியப் பொறுப்புகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அக்கட்சியின் அரசியல் முகம் மேலும் மாறத் தொடங்கியுள்ளது. 

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எல்.முருகனுக்கு பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டதும், தற்போது மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதும் பாஜகவின் முக்கிய அரசியல் நகர்வு என கவனிக்கப்படும் சூழலில் தற்போதைய பாஜக மாநில தலைவர் நியமனமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட கால இடைவெளிக்குப் பின் எல்.முருகன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT